செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2020-01-28 03:31 GMT   |   Update On 2020-01-28 03:31 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை:

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசால் அந்த நாட்டில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும், தீவிரம் அடைந்து வரும் கொரோனா வைரஸ் அண்டை நாடுகளுக்கும் பரவிவருகிறது.

இந்தியா முழுவதும் இந்த வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நடந்தது.



கூட்டத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டம் முடிந்தபின்பு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் பொது சுகாதாரத்துறையும், விமானநிலையத்தின் நிர்வாகமும் இணைந்து சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் உடல் வெப்ப நிலையை பதிவு செய்யும் பிரத்யேக கருவி மூலம் பரிசோதித்து வருகிறது.

சர்வதேச விமான நிலையங்களான திருச்சி, கோவையில் நவீன கருவி மூலம் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், துறைமுகத்திலும் இதே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. பொதுமக்கள் இதுகுறித்து பதற்றமோ, அச்சமோ அடைய தேவையில்லை. நிபா, எபோலா வைரஸ் பாதிப்பு அண்டை மாநிலங்களில் இருந்தபோது, தமிழகத்தில் அந்த பாதிப்பு இல்லாத அளவுக்கு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் குறித்து மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தமிழகத்தில் எந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது? பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை பெறுவதற்கான வார்டு தயாராக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய மத்தியில் இருந்து 3 பேர் கொண்ட குழு வந்தனர்.

இதுகுறித்து தினமும் ஆய்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். நம்மிடம் அந்த வைரஸ் தாக்குதலுக்கான மருந்து, மாத்திரைகள் தயார்நிலையில் உள்ளன. சுகாதாரத்துறை முழு கண்காணிப்பில் உள்ளது.

புதிதாக தொடங்கப்பட உள்ள 9 கல்லூரிகளில் வரக் கூடிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இருக்காது. அதற்கடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News