செய்திகள்
கோப்பு படம்

பேஸ்புக்கில் பழகியவரை பெண் குரலில் பேசி அழைத்து கொள்ளை - போலீஸ் விரட்டிய போது 2 பலி

Published On 2020-01-27 07:42 GMT   |   Update On 2020-01-27 07:42 GMT
பேஸ்புக்கில் பயகியவரை பெண் குரலில் பேசி அழைத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களில் 2 பேரை போலீஸ் விரட்டிய போது அரசு பஸ்டில் மோதி சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர்.
மாதவரம்:

மாதவரம், வி.எஸ்.மணிநகர் அருகே நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் அவரை தாக்கி ஏ.டி.எம். கார்டு மற்றும் பணத்தை பறித்தனர்.

மேலும் ஏ.டி.எம். பின் நம்பரை கேட்டு அடித்து உதைத்தனர். ரகசிய எண்ணை அறிந்த கொள்ளையர்களில் 2 பேர் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் சென்று பணம் எடுத்துக் கொண்டிருந்தனர். மற்ற 3 பேரும் அந்த வாலிபரை மடக்கி பிடித்து வைத்திருந்தனர்.

அந்த நேரத்தில் அவ்வழியே போலீசார் ரோந்து வந்தனர். இதனை கண்ட கொள்ளையர்களின் பிடியில் இருந்த வாலிபர் கூச்சலிட்டார். சந்தேகமடைந்த ரோந்து போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை மீட்டனர்.

மேலும் அங்கிருந்த கொள்ளையர்கள் 2 பேரை மடக்கி பிடித்தனர். மற்றொருவர் ஓடி விட்டார். இதனை கண்ட ஏ.டி.எம். மையத்தில் இருந்த மற்ற 2 கொள்ளையர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

விசாரணையில் பிடிபட்டவர்கள் அம்பத்தூர் அருகே உள்ள நாராயணபுரத்தை சேர்ந்த 17 வயது பாலிடெக்னிக் மாணவர் மற்றும் வினாயகபுரத்தை சேர்ந்த நவீன் என்றும் தெரிந்தது.

மேலும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் கூட்டாளிகளான கொளத்தூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் (19), சதீஷ் (20) என்பது தெரிந்தது. இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் தப்பிய கொள்ளையர்கள் 2 பேரையும் வாகனத்தில் போலீசார் விரட்டிச் சென்றனர்.

கிழக்கு கடற்கரை சாலை பனையூர் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அவ்வழியே சென்ற அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதில், பலத்த காயமடைந்த யுவராஜும், சதீசும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்கள் உடல் பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையில் கொள்ளையர்களிடம் சிக்கயது ஈரோட்டை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பது தெரிந்தது.

பாலிடெக்னிக் மாணவருக்கும், சண்முகம் சுந்தரத்துக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் மாணவர் ஷீலா என்ற பெயரில் பெண் குரலில் பேசி பழகி வந்துள்ளார்.

பின்னர் அவரை மாதவரம் அருகே வரச்சொல்லி இருக்கிறார். பெண் என்று நினைத்து சண்முகசுந்தரமும் வந்துள்ளார். அப்போது மாணவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிந்தது.

மேலும் தப்பி ஓடியவர் என்ஜினீயரிங் மாணவரான ஆதி என்பதும் தெரிந்தது. அவர் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதான நவீன் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவனான மாணவர் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
Tags:    

Similar News