செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடக்கவில்லை- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Published On 2020-01-26 11:15 GMT   |   Update On 2020-01-26 14:04 GMT
குரூப் 4 தேர்வை போன்று ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. அப்படி நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள பெரியகொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட 69 பயனாளிகளுக்கு சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் டி.ஜி.புதூர் தனியார் மண்டபத்தில் வழங்கினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வில் நூறு சதவிகிதம் வெற்றி பெறுவார்கள் இது குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளிகளுக்கு 5 மற்றும் 8-ம் வகுப்பு பொது தேர்விலிருந்து விலக்களிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

குரூப் 4 தேர்வை போன்று ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. அப்படி இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். குண்டேரிப்பள்ளம் அணையை சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொடிவேரி அணை பகுதியில் தடுப்பு சுவர் மற்றும் தளங்கள் அமைக்கவும் சுற்றுலா பயணிகள் உடை  மாற்றும் அறை கட்டவும் ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு இந்த வாரம் இறுதிக்குள் டெண்டர் முடுக்கப்பட்டு பணிகள் விரைந்து செய்யப்படும்

12 கோடி மதிப்பீட்டில் கொடிவேரி-நால்ரோடு ஏழூர், அரக்கன்கோட்டை வரை புதிதாக குழாய்கள் அமைக்கப்பட்டு ஆற்று குடிநீர் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது.

பவானி, அத்தாணி, நால்ரோடு, சத்தியமங்கலம் வரை நான்கு வழி சாலையாக மாற்ற மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கோபி கோட்டாட்சியர் ஜெயராமன், தாசில்தார் விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News