செய்திகள்
குடியரசு தினவிழாவை முன்னிட்டு திருச்சி ரெயில் நிலையம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த காட்சி.

குடியரசு தினவிழா - கலெக்டர் சிவராசு நாளை தேசியக்கொடி ஏற்றுகிறார்

Published On 2020-01-25 17:53 GMT   |   Update On 2020-01-25 17:53 GMT
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாளை, குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. கலெக்டர் எஸ்.சிவராசு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
திருச்சி:

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது.

கலெக்டர் சிவராசு கலந்து கொண்டு காலை 8 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். காவல்துறை மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்படுகிறது. நிறைவாக பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதுபோல திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் தேசியக்கொடியை ஆணையர் எஸ்.சிவசுப்பிரமணியன் ஏற்றி வைக்கிறார்.

திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் கல்லுக்குழி ரெயில்வே விளையாட்டு மைதானத்தில் கோட்ட மேலாளர் அஜய்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். இதையொட்டி, ஜங்சன் ரெயில் நிலையம் மற்றும் கோட்ட அலுவலகம் அலங்கார மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.

குடியரசு தினவிழாவையொட்டி, நேற்று ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. மேலும் ரெயில் பெட்டிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

திருச்சி விமான நிலைய வளாகத்தில் நாளை நிலைய இயக்குனர் குணசேகரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொள்கிறார். பாதுகாப்பு கருதி விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்தியும், போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையும் நடத்தப்பட்டது. விமான நிலையத்திற்குள் பயணிகள் வரும் வாகனங்கள், உடைமைகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது. இதேபோல் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள காந்திசிலைமண்டபம், அரசு மருத்துவமனை அருகே உள்ள காந்தி அஸ்தி மண்டபம் ஆகியவை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
Tags:    

Similar News