செய்திகள்
வருமானவரித்துறை சோதனை நடந்த வேலம்மாள் பள்ளி

வேலம்மாள் கல்வி குழுமம் கணக்கில் காட்டப்படாத வருமானம் ரூ.532 கோடி

Published On 2020-01-25 03:23 GMT   |   Update On 2020-01-25 03:23 GMT
வேலம்மாள் கல்வி குழுமம் கணக்கில் காட்டப்படாத வருமானம் ரூ.532 கோடி என்றும், இதனை சோதனையின்போது ஒப்புக்கொண்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரையடுத்து சென்னை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமத்துக்கு சொந்தமான பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கல்வி குழும நிர்வாகிகளின் வீடுகள் என தமிழகம் முழுவதும் 64 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனை கடந்த 21-ந்தேதி முதல் தொடர்ந்து நடந்தது.

இந்த சோதனையில் வேலம்மாள் கல்வி குழுமம் நடத்தும் என்ஜினீயரிங் கல்லூரிகள், பள்ளிகளில் பல்வேறு வகைகளில் மாணவர்களிடம் பெறப்பட்ட பணத்துக்கு கணக்கு காண்பிக்காமலும், மருத்துவமனை கணக்கில் பண ரசீது காண்பிக்காமலும் வரி ஏய்ப்பு செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவ்வாறு மோசடி செய்த பணத்தை சொத்துகள் வாங்குவதற்கு பயன்படுத்தியதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது. இதையடுத்து வரி ஏய்ப்பு செய்ததை வேலம்மாள் கல்வி குழுமம் ஒப்புக்கொண்டுள்ளது. வருமான வரி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல கணக்கில் காட்டப்படாத வருமானம் ரூ.532 கோடி இருப்பதையும் வேலம்மாள் கல்வி குழுமம் ஒப்புக்கொண்டுள்ளது. இதையடுத்து வேலம்மாள் கல்வி குழுமத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை தற்காலிகமாக நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட தகவல் வருமான வரித்துறை கமிஷனர் (ஊடகம் மற்றும் தொழில்நுட்ப கொள்கை பிரிவு) சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News