செய்திகள்
கேசி பழனிசாமி

கோவையில் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கைது

Published On 2020-01-25 01:16 GMT   |   Update On 2020-01-25 07:00 GMT
கோவையில் இன்று காலை அதிமுக இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கேசி பழனிசாமியை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

திருப்பூர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கே.சி. பழனிசாமி.கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு பகுதியில் வசித்து வருகிறார்.

எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் எம்.எல்.ஏ.வாகவும், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எம்.பி.யாகவும் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவை பொது செயலாளராக தேர்ந்து எடுத்தனர். அதற்கு கே.சி. பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

பொது செயலாளரை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். நிர்வாகிகள் தேர்வு செய்தது செல்லாது என கூறினார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் மனு அளித்தார். அதில் சசிகலா நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

மேலும் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கிடையாது.

அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

அ.தி.மு.க. 2 அணியாக பிரிந்து ஒன்றாக சேர்ந்த பின்னர் கே.சி. பழனிசாமிக்கு கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது.

பல்வேறு டி.வி. நிகழ்ச்சிகளில் விவாதங்களில் கலந்து கொண்டார். மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என அவர் டி.வி. விவாதத்தில் கருத்து வெளியிட்டார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இவர் கருத்து கூறியதாக கடந்த 16.3.18 அன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

நீக்கப்பட்ட சில நாட்களில் அவர் மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ளப்பட்டதாக இணையதளங்களில் தகவல் வெளியானது. இதை அ.தி.மு.க. தலைமை மறுத்தது. கே.சி.பழனிசாமியை மீண்டும் கட்சியில் சேர்க்கவில்லை என்று அறிவித்தனர்.

இந்த நிலையில் கே.சி. பழனிசாமி தனியாக இணையதளம் தொடங்கி அதில் தன்னை அ.தி.மு.க.வில் தொடர்ந்து இருப்பது போல் காண்பித்து வந்ததாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வின் லட்டர் பேடு, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றுடன் பேஸ்புக் மற்றும் சமூக வலை தளங்களில் தனது கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தன்னை கட்சி நிர்வாகி போல் காட்டி கொள்வதா என அதிருப்தியில் இருந்தனர்.

இந்த நிலையில் சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் என்பவர் சூலூர் போலீசில் கே.சி. பழனிசாமி மீது புகார் அளித்தார்.

கே.சி. பழனிசாமி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். ஆனால் அவர் தன்னை கட்சியில் இருப்பது போல் சித்தரித்து கட்சி லெட்டர் பேடு, இரட்டைஇலை சின்னம் ஆகியவற்றுடன் சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதனை தொடர்ந்து கே.சி. பழனிசாமி மீது சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். டி.எஸ்.பி. பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம்லாலி ரோட்டில் உள்ள கே.சி.பழனிசாமி வீட்டிற்கு சென்றனர்.

அப்போது அவர் தூங்கி கொண்டு இருந்தார். அவரிடம் புகார் தொடர்பாக எடுத்து கூறிய போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது டி.எஸ்.பி. மற்றும் போலீசாருடன் கே.சி. பழனிசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரது வீட்டில் வைத்து சுமார் ஒன்றரை மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினார்.

பின்னர் அவரை சூலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர் மீது 417 ஏமாற்றுதல், 418 நம்பியவர்களை ஏமாற்றுதல், 419 ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், 464 தவறான ஆவணத்தை உருவாக்குதல், 465 பொய் ஆவணம் உருவாக்கி ஏமாற்றுதல், 468 ஏமாற்ற திட்டமிட்டு ஆவணம் உருவாக்குதல், 479 சொத்து குறியீட்டை தவறாக பயன்படுத்துதல், 481 தவறான சொத்து குறியீட்டை பயன்படுத்துதல், 482 சொத்து குறியீட்டை தவறாக பயன்படுத்தியதற்கு தண்டணை, 485 சொத்து அடையாளத்தை உருவாக்கும் கருவியை வைத்திருந்தல், மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்ளிட்ட 11 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News