செய்திகள்
கோவை சர்வதேச விமான நிலையம்

குடியரசு தினவிழாவையொட்டி கோவையில் 3500 போலீசார் பாதுகாப்பு

Published On 2020-01-24 10:18 GMT   |   Update On 2020-01-24 10:18 GMT
கோவையில் குடியரசு தின விழாவையொட்டி 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை:

குடியரசு தினம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

குடியரசு தின நாளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவையில் குடியரசு தின விழாவையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் பொதுக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பஸ்நிலையம், ரெயில்நிலையம் போன்ற இடங்களில் ரோந்து சென்று பாதுபாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல புறநகர் மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து கோவை மாவட்டத்துக்குள் வரும் வாகனங்களை சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

குடியரசு தின விழா நடைபெறும் வ.உ.சி. மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு யாரையும் செல்ல விடாமல் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை நுழைவாயிலில் போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் ரெயில்வே பிளாட்பாரங்களில் சாதாரண உடையில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் குடியரசு தின விழாவையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

Tags:    

Similar News