செய்திகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

Published On 2020-01-24 07:33 GMT   |   Update On 2020-01-24 07:33 GMT
குரூப்-4 முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அழியும் மையை பயன்படுத்தி உள்ளதாகவும் இந்த முறைகேட்டிற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை:

தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்கள், குடும்ப பின்னணி குறித்தும் விரிவாக விசாரித்தனர். 40-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பலர் ஒரே விதமான பதில்களை தெரிவித்தனர்.

வெளி மாவட்டத்தில் இருந்து ராமேசுவரம், கீழக்கரை பகுதியில் தேர்வு எழுதியதற்கான காரணம் குறித்து கேட்டபோது, திதி கொடுப்பதற்காக ராமேசுவரம் வந்ததால் அங்கு தேர்வு எழுதினேன் என்று 10-க்கும் மேற்பட்டோர் பதில் அளித்தனர். சிலர் தொழில் வி‌ஷயமாக ராமேசுவரம் வந்ததால் இங்கு தேர்வு எழுதியதாக தெரிவித்தனர். இது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.

இதனிடையே டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி நந்தகுமார், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கேள்வித்தாள்கள் வைக்கப்பட்டிருந்த கருவூல அறையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

தேர்வு மையங்களுக்கு கேள்வித்தாள்கள் எப்போது கொண்டு செல்லப்பட்டது? விடைத்தாள்கள் எப்போது சேகரிக்கப்பட்டது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கும் நேரில் சென்ற நந்தகுமார் அங்குள்ள அறைகளில் ஆய்வு செய்தார். தேர்வு முறைகேடுகள் நடக்க அங்கு சாத்தியக்கூறுகள் இருந்ததா? என்பது குறித்தும் உதவியாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார்.

குரூப்-4 தேர்வின்போது பணியில் இருந்த அதிகாரிகள், கல்வி நிறுவனப்பணியாளர்கள் உள்ளிட்டோரையும் நேரில் அழைத்து விசாரித்தார்.

இதனிடையே குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற யூகங்கள் வெளியான நிலையில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் டி.ஜி.பி.யிடம் விசாரணை நடத்த மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் உடனடியாக குரூப்-4 முறைகேட்டில் விசாரணையை தொடங்கியுள்ளனர். குரூப்-4 முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அழியும் மையை பயன்படுத்தியுள்ளனர். இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.

நேற்று இரவு ராமநாதபுரம் வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதற்கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட தாசில்தார்களை நேரில் அழைத்து விசாரித்தனர்.

கீழக்கரை தாசில்தார் வீரராஜ், ராமேசுவரம் தாசில்தார் பார்த்தசாரதி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்களை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சேகரித்தனர்.

மேலும் தேர்வு சமயத்தில் இங்கு தாசில்தாராக பணிபுரிந்த ஜாபர், பபிதா ஆகியோரையும் நேரில் அழைத்து விசாரித்தனர்.

மேல் விசாரணைக்காக தாசில்தார்கள் பார்த்தசாரதி, பபிதா மற்றும் தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார், ஒரு அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 5 பேரை சென்னைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

மேலும் குரூப்-4 தேர்வில் முதலிடம் பெற்ற வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 40 பேரையும் தனித்தனியாக விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளது.

இதற்காக அவர்களது முகவரி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பெற்றுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்த ஆலோசித்து வருகிறார்கள்.

குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடத்தப்பட்டதா? இதற்கு உடந்தையாக இருந்தது யார்? என்ற விவரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் வெட்ட வெளிச்சமாகி விடும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News