செய்திகள்
சென்னை ஐகோர்ட்

பயங்கரவாதிகளுக்கு 200 சிம்கார்டு சப்ளை செய்த வாலிபருக்கு ஜாமீன் மறுப்பு

Published On 2020-01-23 05:08 GMT   |   Update On 2020-01-23 05:08 GMT
பயங்கரவாதிகளுக்கு 200 சிம்கார்டு சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட வாலிபர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை:

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் உடுப்பி ரெயில் நிலையத்தில் அப்துல் ஷமிம், தவுபிக் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள செல்போன் கடைகளில் இருந்து போலி முகவரி மூலம் ஏராளமான செல்போன் ‘சிம்கார்டு’ சப்ளை செய்யப்பட்டது தமிழக ‘கியூ’ பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு சப்ளை செய்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பன், ராஜேஷ் (வயது 34), அன்பரசன், அப்துல் ரகுமான் உள்பட 9 பேரை ‘கியூ’ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் ராஜேஷ் ஜாமீன் கோரி சென்னையில் உள்ள மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

ராஜேசுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து ‘கியூ’ பிரிவு துணை சூப்பிரண்டு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் போலியான முகவரி, புகைப்படம், ஆவணங்களை பெற்றுக்கொண்டு பயங்கரவாதிகளுக்கு அதிக விலையில் சிம்கார்டுகளை வழங்கி உள்ளார். மனுதாரர் தெரிந்தே இந்த குற்ற செயலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவருகிறது.

பயங்கரவாதிகளை தூண்டி விடும் வகையிலும், நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அவர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதிகள் முகமது அனீப்கான், இம்ரான் ஆகியோர் தங்களது நோக்கத்தை நிறைவேற்றவும், அதற்கான பயிற்சியில் ஈடுபடவும் மேற்கு வங்க மாநிலத்தில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வாங்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள், 89 தோட்டாக்கள், லேப்-டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மனுதாரரும், பச்சையப்பன் என்பவரும் சேர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் சந்தேகத்துக்குரிய நபர்கள் 200 பேருக்கு சிம்கார்டு சப்ளை செய்திருப்பது விசாரணையில் தெரியவருகிறது. இது ஒரு முக்கியமான வழக்கு ஆகும். இந்த வழக்கில் விசாரணை இன்னும் முடிவடையவில்லை.

இதுபோன்ற சூழ்நிலையில் மனுதாரரை ஜாமீனில் விடுவித்தால் விசாரணை பாதிக்கும். மனுதாரரை ஜாமீனில் விடுவிக்கும் பட்சத்தில் அவர் தலைமறைவாகி விடுவார். சாட்சிகளை கலைத்து விடுவார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ராஜேசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News