செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினிகாந்த் வாயை மூடி மவுனமாக இருப்பது நல்லது: அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

Published On 2020-01-23 01:57 GMT   |   Update On 2020-01-23 01:57 GMT
நடிகர் ரஜினிகாந்த் தேவையில்லாத கருத்தை கூறி இதுபோன்ற சர்ச்சையை உருவாக்க வேண்டாம். அவர் வாயை மூடி மவுனமாக இருப்பது நல்லது என்று அமைச்சர் ஜெயக்குமார் சாடினார்.
சென்னை :

மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் சொன்னது போல, 1971-ல் எதுவும் நடக்கவில்லை. துக்ளக் பத்திரிகையில் எழுதிய சோ, நீதிமன்றத்துக்கு சென்று சில அமைப்புகள் எனக்கு கொடுத்த தகவலின் பேரில் தான் எழுதினேன் என்று தெரிவித்தார். எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது என்றும் கூறினார்.

நடைபெறாத ஒரு வி‌‌ஷயத்தை நடிகர் ரஜினிகாந்த் சொல்லி மக்களை திசை திருப்புகிறார். நாங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்களில் பெரியாரும் ஒருவர். அதனைத் தொடர்ந்து அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரும் எங்கள் தலைவர்கள் ஆவார்கள்.

இந்த 4 பெரும் தலைவர்களின் புகழுக்கு சிறு அளவில் இழுக்கு ஏற்பட்டாலும் கூட அ.தி.மு.க. குரல் கொடுக்கும். எதிர்த்து பேசுபவர்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

நடிகர் ரஜினிகாந்த் தேவையில்லாத கருத்தை கூறி இதுபோன்ற சர்ச்சையை உருவாக்க வேண்டாம். அவர் வாயை மூடி மவுனமாக இருப்பது நல்லது. ரஜினிகாந்த் என்ன ஆதாயத்துக்காக இதை சொன்னார் என்று தெரியவில்லை.

மாறான கருத்தை சொல்லி மக்களை திசை திருப்பி மலிவான அரசியல் செய்யக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறோம். எங்களை பொறுத்தவரையில் பெரியார் மதிக்கப்பட வேண்டியவர்.



கூட்டணி வேறு. கொள்கை வேறு. பா.ஜ.க.வுக்கு ஒரு கொள்கை இருக்கலாம். எங்களுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. கொள்கை மாறுபடுவது வேறு வி‌‌ஷயம். அதற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை.

கூட்டணி குறித்து அமைச்சர் பாஸ்கர் பேசியது, அவருடைய சொந்த கருத்தாக இருக்கலாம். அதை கட்சியின் கருத்தாக நிச்சயம் எடுக்க முடியாது. கொள்கை முடிவுகளை கட்சி மட்டுமே எடுக்கும். பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடருகிறது. கடவுள் மறுப்பு கொள்கையில் பெரியார் இருந்தார். ஆனால் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இருந்தார். அண்ணா வழிதான் எங்கள் வழி.

அ.தி.மு.க. எதற்கும் பயப்படாது. அடக்குமுறையை எதிர்த்து உருவானது தான், அ.தி.மு.க. இயக்கம். எத்தனை ரஜினி வந்தாலும் சரி, எவ்வளவு பேர் கிளம்பி வந்தாலும் சரி அ.தி.மு.க.வை அசைக்க முடியாது.

பரிணாம வளர்ச்சி புத்தகத்தை முழுமையாக படித்துவிட்டு ரஜினிகாந்த் ஒரு கருத்து சொல்லட்டும். அது ஆரோக்கியமான விவாதமாக இருக்கும். நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது. அதனை முன்னெடுத்து போக வேண்டும். நல்ல கருத்தை சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதை விட்டுவிட்டு, பிற்போக்கான வி‌‌ஷயத்தில் கவனத்தை செலுத்தி எல்லாருடைய நேரத்தையும் வீணடிக்கிறார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்துக்கு தேவையில்லை என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்கு விதை போட்டது தி.மு.க.. அவர்களால் தான் இந்த பிரச்சினை. இன்று ஒன்றும் தெரியாத அப்பாவி போல நடிக்கிறார்கள். மாநில அரசு இந்த திட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News