செய்திகள்
முக ஸ்டாலின்

தடைகளை தகர்த்து வெற்றி பயணம் தொடருவோம்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Published On 2020-01-22 09:49 GMT   |   Update On 2020-01-22 09:49 GMT
திருச்சியில் நடைபெற உள்ள உள்ளாட்சி உறுப்பினர்கள் மாநாடு தொடர்பாக தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும். மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும்.

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க அனுமதிக்க மாட்டோம் எனத் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு அறிவித்திட வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்ற அ.தி.மு.க. அரசின் வஞ்சக நாடகத்திற்குக் கண்டனம். இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.

அ.தி.மு.க. அரசின் அடுக்கடுக்கான தோல்விகளை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தி அ.தி.மு.க.வின் முகமூடியைக் கிழித்தெறிய சபதம். இவற்றின் அவசியம் முன்னுரிமை கருதியே அவசரமாகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.

பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கழகத்திற்கு மிகப்பெரும் வெற்றியை வழங்கியிருக்கிறார்கள்.

சர்க்கரைப் பொங்கல் போல செங்கரும்பு போல இனிப்பான செய்திகள்தான் இவை என்றாலும், அதே பொங்கல் நன்னாளில் பயன்படுத்தும் இஞ்சியைப் போல மஞ்சளைப்போல நமக்குச் சில மருந்துகளும் தேவைப்படுகின்ற காலம் இது.

“களத்துக்குத் தயாராக வேண்டிய காலம் இது. அவசரமாக செயல்படுத்த வேண்டியவை இருப்பதால்தான் அவசர செயற்குழுவைக் கூட்டியுள்ளோம். தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை 2020-ம் ஆண்டு என்பது தேர்தல் ஆண்டு. இந்த ஆண்டில் எப்படி ஒவ்வொரு நாளும் உழைக்கிறோமோ எப்படி தீவிரமாகச் செயல்படுகிறோமோ அதன் பலனை 2021-ல் பெறலாம். இந்த ஆண்டு முழுவதும் களத்தில் இருந்தால் 2021-ல் வெற்றி உறுதி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

5090 ஒன்றியக் கவுன்சிலர்களில் தி.மு.கழகக் கூட்டணி 2100 இடங்களைக் கைப்பற்றியது. அ.தி.மு.க.வை விட 319 இடங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளோம். மாவட்ட கவுன்சிலர்களில் மொத்தமுள்ள 515 இடங்களில் நமக்கு வெற்றியாக அமைந்தவை 243. இதிலும் அ.தி.மு.க.வைவிட 29 இடங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளோம். ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம், அத்துமீறல், அராஜகம் இவற்றையெல்லாம் மீறி 60 சதவீத இடங்களைத் தி.மு.கழகம் கைப்பற்றியுள்ளது. நேர்மையாகவும் முழுமையாகவும் தேர்தல் நடந்திருந்தால் 90 சதவீத வெற்றியைப் பெற்றிருப்போம்.

ஊரக உள்ளாட்சிக்கான தலைவர் துணைத்தலைவர் பதவிகளுக்குரிய மறைமுகத் தேர்தலில் தி.மு.கழகம் 12 மாவட்டங்களில் வென்றுள்ளது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 13 மாவட்டங்களைப் பெற்றுள்ளது. ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக மறைமுகத் தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையிலும், தி.மு.க. அதனை எதிர்கொண்டு பெற்றுள்ள வெற்றி உற்சாகத்தை அளிக்கிறது.

ஒவ்வொரு வெற்றியும் நமக்கு வரலாறாக அமைகிறது. ஓர் ஆண்டுக்கு முன்புவரை பாராளுமன்றத்தில் நமக்கு ஒரேயொரு உறுப்பினர்கூட இல்லை. இப்போது 24 உறுப்பினர்களுடன் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையினைப் பெற்றிருக்கிறோம்.

சட்டமன்றத்தில் 89 ஆக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை இப்போது ‘செஞ்சுரி’ அடித்து 100 ஆக உயர்ந்துள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றோம். அதில் சில இடங்களில் உள்ளாட்சித் தேர்தலில் தொய்வு தெரிகிறது. தயக்கமும் சுணக்கமும் ஏன் என்பதை ஆலோசனை செய்தாக வேண்டும். கழக நிர்வாகிகள் உங்களால் முடிந்தளவு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். தலைமைக் கழகத்தால் தான் தீர்க்க முடியும் என்கிற வி‌ஷயங்களைச் சொல்லுங்கள். பரிசீலித்துத் தீர்த்து வைக்கும்.

நோய் வந்தால் உடனடியாக அதற்கு மருந்து தந்தாக வேண்டும். இல்லாவிட்டால் எந்த மருந்துக்கும் குணமாகாத நோயாக அது மாறிவிடும். சிறு பிரச்சினைதானே என்று மறைத்தால், அது உள்ளுக்குள்ளேயே வளர்ந்து பெரிய பிரச்சினையாக ஆகிவிடும். அவசியமான ‘ஆபரே‌ஷனை’செய்துதான் ஆக வேண்டும். கூடினோம் கலைந்தோம் என்று எப்போதும் இருந்ததில்லை. இனியும் இருக்க முடியாது.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பலர் புதியவர்கள். அவர்களுக்கு சொல்லித்தரவேண்டும்; கற்றுத்தர வேண்டும்; கண்காணித்திட வேண்டும். அதற்காக அடிமைகளைப் போல யாரையும் நடத்திடக்கூடாது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு வருகிற 31-ந்தேதியன்று கழக வரலாற்றில் திருப்புமுனை பல தந்த மலைக்கோட்டையாம் திருச்சியில் நடைபெறுகிறது.

மாவட்டக் கழகச் செயலாளர் கே.என்.நேரு மாநாட்டிற்கான ஏற்பாடுகளை முன்னின்று மிகப் பிரம்மாண்டமாக செய்து கொண்டிருக்கிறார். வெற்றி பெற்ற அனைவரும் அதில் பங்கேற்று, மக்கள் தொண்டாற்றிடப் பயிற்சி பெற்றிட வேண்டும்.

இம்முறை வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் அடுத்த வாய்ப்பில் கழகத்தின் வெற்றியை மனதில்கொண்டு செயலாற்றிட வேண்டும். நமது வெற்றிப்பாதையில் குறுக்கிடக்கூடிய தடைகள் வெளிப்புறத்தில் இருந்து வந்தாலும், உட்புறத்திலிருந்து உருவாக்கப்பட்டாலும், அதனைப் பக்குவமாகத் தகர்த்தெறிந்து முன்னேறிடும் ஆற்றல் உங்களிடம் உண்டு. உள்ளாட்சிக் களத்தில் 2020 வெற்றி. அதனைத் தொடர்ந்து 2021-ல் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திடும் வகையில் மகத்தான வெற்றி என கழகத்தின் வெற்றிப் பயணம் கம்பீரமாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Tags:    

Similar News