செய்திகள்
தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை குடமுழுக்கு விழா- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு

Published On 2020-01-21 10:21 GMT   |   Update On 2020-01-21 11:16 GMT
தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக, தலைமைச் செயலாளர் தலைமையில் 21 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தஞ்சை பெரிய கோவிலில் பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தஞ்சை குடமுழுக்கு விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவிற்காக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் 21 உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. 

குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை கண்காணிப்பற்காக அமைக்கப்பட்ட இந்த குழுவில், நிதித்துறை, நகராட்சி நிர்வாகம், சுற்றுலாத் துறை செயலாளர்கள், தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் பல்வேறு துறைகளின் கூடுதல் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 

இதற்கிடையே குடமுழுக்கை தமிழில் நடத்த உத்தரவிடக்கோரி ராமநாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தஞ்சை பெரிய கோவில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணை 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News