செய்திகள்
சுப்பிரமணியன் சுவாமி

ரஜினிகாந்துக்கு சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு

Published On 2020-01-21 09:22 GMT   |   Update On 2020-01-21 09:22 GMT
பெரியார் பற்றி ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ரஜினிகாந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை விழாவில் பேசிய ரஜினி பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரஜினி மீது போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டு வருகிறது. திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் ரஜினியை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டனர். அரசியல் கட்சியினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.



பெரியார் பற்றிய விமர்சனத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்று கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்து இருந்தது. இதையடுத்து ரஜினி வீட்டு முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை போயஸ் கார்டனில் தனது வீட்டு முன்பு திடீரென ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்து பெரியார் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கம் அளித்தார். அப்போது 1971ல் திராவிடர் கழகம் நடத்திய பேரணி குறித்த தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என கூறினார்.




இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜனதா மூத்த தலைவரும், மேல்-சபை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

1971-ம் ஆண்டு தி.க. பேரணி விவகாரத்தில் நான் ரஜினிகாந்த் பக்கம் இருக்கிறேன். அவர் விரும்பினால் அவரை கோர்ட்டில் ஆதரிப்பேன் என்று அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News