செய்திகள்
அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் சாலை விபத்தில் உயிர் இழப்பு குறைந்துள்ளது - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Published On 2020-01-21 09:08 GMT   |   Update On 2020-01-21 09:08 GMT
தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

31-வது சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணியை போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவகர், போலீஸ் அதிகாரி பிரமோத்குமார், முன்னாள் எம்.பி. ஜெயவர்தன், அதிகாரிகள், மாணவர்கள், டிரைவர்கள் இதில் கலந்துகொண்டனர். தீவுத்திடலில் இந்த பேரணி நிறைவு பெற்றது.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விபத்தில்லாத தமிழகமாக உருவாக வேண்டும் என்று மறைந்த முதல்வர் அம்மா கூறினார். அவரது கனவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவிலேயே சாலை விபத்து, உயிர் இழப்பு குறைந்த முதல் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு விருது வழங்கி உள்ளது.

விபத்தை கணக்கீடு செய்யும்போது 2000-ம் ஆண்டில் 10 ஆயிரம் பேருக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர். 2018-ம் ஆண்டில் உயிர் இழப்பு 3 ஆக குறைந்துள்ளது. இதற்காக இந்த விருது மத்திய அரசிடம் இருந்து கிடைத்துள்ளது.

2020-ம் ஆண்டுக்குள் சாலை விபத்தினை குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் 2018-ம் ஆண்டில் 43 சதவிகித விபத்து குறைந்துள்ளது.

மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் 60 சதவிகிதம் பேர் விபத்தில் சிக்கி உயிர் இழக்கிறார்கள். நகர் புறங்களில் ஹெல்மெட்டை 90 சதவிகிதம் பேர் அணிய தொடங்கி விட்டார்கள்.

கிராமப் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஹெல்மெட் அணியவும், அதனை ‘லாக்’ செய்யவும் வேண்டும். ஹெல்மெட் அணிந்தும் அதனை லாக் செய்யாமல் இருப்பதால் விபத்தில் உயிர் இழப்பு ஏற்படுகிறது. 75 சதவிகிதம் பேர் இதுபோன்று விபத்தில் சிக்கி உயிர் இழக்கின்றனர்.

தரமான சாலைகள் இல்லாததாலும், வேகமாக செல்வதாலும் விபத்து ஏற்படுகிறது. விபத்தை குறைக்கத்தான் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். செங்கல்பட்டு-திருச்சி சாலையில் விபத்து அதிகம் நடப்பதால் 54 இடங்களில் தானியங்கி ரேடார் கேமராக்கள் பொறுத்தப்படும். வெளிநாடுகளில் இருப்பது போல விதிகளை மீறி செல்லும் வாகனங்கள் குறித்த தகவல் பெற்று அபராதம் விதிக்கப்படும்.

இந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது விபத்து குறையும். இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல கிருஷ்ணகிரி சாலை, உளுந்தூர்பேட்டை-சேலம் சாலைகளிலும் விபத்தை குறைக்க கேமராக்கள் பொறுத்த ஆய்வு செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் படிப்படியாக இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது விபத்து குறைந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News