செய்திகள்
ரஜினிகாந்த்

ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் 23-ந்தேதி வீட்டை முற்றுகையிடுவோம்- கோவை ராமகிருஷ்ணன் அறிவிப்பு

Published On 2020-01-20 06:53 GMT   |   Update On 2020-01-20 06:53 GMT
பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் 23-ந்தேதி வீட்டை முற்றுகையிடுவோம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

சென்னை. ஜன.20-

துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலம் நகரில் ராமர், சீதை ஆகிய இந்து கடவுள்களின் நிர்வாண படங்களை பெரியார் ஊர்வலமாக எடுத்து சென்று செருப்பால் அடித்ததாக பேசினார்.

இது உண்மைக்கு மாறான தவறான தகவல் என்று எதிர்ப்பு தெரிவித்த திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் ரஜினி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவலை பேசிய ரஜினிகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை திருவல்லிக்கேணி, சேலம், ஈரோடு, மேட்டூர், புதுக்கோட்டை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களிலும் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, “ரஜினிகாந்த் அந்த ஊர்வலத்தின் சிறு பகுதியை மட்டும்தான் கூறியுள்ளார். ஆனால், திராவிடர் கழகத்தினர் காவல் துறையில் பொய் புகார் அளிக்கிறார்கள். அதன்மூலம் ரஜினிகாந்தை மிரட்டலாம் என்று நினைக் கிறார்கள். ஆனால், சட்டப்படி ரஜினி மீது நடவடிக்கை எடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.


தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கோவை ராம கிருஷ்ணன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தந்தை பெரியார் ராமன் சீதை உருவங்களை நிர்வாண மாக கொண்டுவந்து செருப்பால் அடித்தார் என்று பொய்யான செய்தியை நடிகர் ரஜினிகாந்த் பரப்பி இருக்கின்றார். இது அப்பட்டமான பொய் செய்தி.

இதற்காக ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை யென்றால் வருகின்ற 23-ந்தேதி காலை 10 மணிக்கு கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News