செய்திகள்
பொங்கல் பண்டிகை மது விற்பனை

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் - 4 நாட்களில், டாஸ்மாக் கடைகளில் ரூ.10½ கோடிக்கு மது விற்பனை

Published On 2020-01-19 18:14 GMT   |   Update On 2020-01-19 18:14 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 4 நாட்களில் கரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.10½ கோடிக்கு மதுபானம் விற்பனையானது.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 91 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் தினமும் சராசரியாக ரூ.1 கோடி அளவிற்கு மதுபானம் விற்பனையாகிறது. அதிலும் பண்டிகை மற்றும் விழா காலங்களில் மதுபானம் விற்பனை அதிகரிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, வழக்கம் போல் கரூர் அருகே சணப்பிரட்டி திருச்சி மெயின்ரோட்டில் உள்ள கரூர் மாவட்ட தமிழ்நாடு மாநில வாணிப கழக (டாஸ்மாக்) மொத்த விற்பனை கிட்டங்கியில் மதுபானங்கள் இருப்பு தயார் நிலையில் இருந்தது.

பின்னர் அவை கரூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு லாரிகளில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த 13, 14, 15 மற்றும் 17-ந்தேதிகளில் வழக்கத்தை விட மதுபான விற்பனை படுஜோராக நடந்தது. இதில் கடந்த 13-ந்தேதி ரூ.1 கோடியே 60 லட்சத்திற்கும், 14-ந்தேதி ரூ.2 கோடியே 55 லட்சத்திற்கும், பொங்கல் பண்டிகையான 15-ந்தேதி அன்று ரூ.3 கோடியே 60 லட்சத்துக்கும், 17-ந்தேதி அன்று ரூ.2 கோடியே 77 லட்சம் வரை மதுபான விற்பனை நடந்துள்ளது. கடந்த 16-ந்தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுவிற்பனை நடக்கவில்லை என டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த வகையில் பார்த்தால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் ரூ.10½ கோடி வரை மதுபான விற்பனை நடந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டிய 4 நாட்களில் ரூ.9 கோடி வரை மது விற்பனை நடந்திருக்கிறது. கடந்த ஆண்டு (2019) ரூ.10¼ கோடிக்கு பொங்கல் பண்டிகையையொட்டிய நாட்களில் மது விற்பனை நடந்தது.

அந்த வகையில் பார்த்தால் கடந்த ஆண்டை விட தற்போது பொங்கல் பண்டிகைக்கான மது விற்பனை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங் கள் கூறுகின்றன. இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது அவர்கள் கூறுகையில், “கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக விற்பனையாகும் மதுபானங்களை விட பொங்கலையொட்டி சற்று கூடுதலாக விற்பனையாகி உள்ளது. அதிலும் பீர், ரம், பிராந்தி வகைகளை தான் மதுபிரியர்கள் அதிகமாக விரும்பி வாங்கி சென்றிருக்கின்றனர்.

பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின் உள்ளிட்ட மதுவகைகள் பொங்கல் அன்று மட்டும் 5,500 பெட்டிகள் விற்று தீர்ந்தன. அன்றைய தினம் 3,500 பீர் பெட்டிகள் விற்பனையானது. பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் பொருட்டு மதுபிரியர்களின் கூட்டம் டாஸ்மாக் கடைகளில் அலைமோதியதை காண முடிந்தது. இதனால் அடிக்கடி மதுகாலியாகும் கடைகளை குறித்து வைத்து கொண்டு, குடோனில் இருந்து தயார் நிலையில் சரக்குகள் அனுப்பப்பட்டு வியாபாரம் நடந்தன.

பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்துள்ளதால் டாஸ்மாக் பார் உள்ளிட்டவற்றில் தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்பாடு தவிர்க்கப்பட்டது. இதனால் மது குடிப்பவர்கள் தாங்களே வீட்டிலிருந்து பாட்டிலில் தண்ணீர் எடுத்து வந்தனர். மேலும் இறைச்சி வகைககள் உள்ளிட்டவை வாழை இலை உள்ளிட்டவற்றில் பார்களில் விற்பனை செய்யப்பட்டன. இதனை டாஸ்மாக் மேலாண்மை குழுவினர் கண்காணித்து பிளாஸ்டிக் பயன்பாடு உள்ள பார்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்தனர். 
Tags:    

Similar News