செய்திகள்
கமல்ஹாசன்

650 கிராமங்களில், 26-ந்தேதி கிராம சபைகளை கூட்ட கமல்ஹாசன் அதிரடி முடிவு

Published On 2020-01-19 11:07 GMT   |   Update On 2020-01-19 11:55 GMT
குடியரசு தினமான வருகிற 26-ந்தேதி அன்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 650 கிராமங்களில், கிராம சபைகளை கூட்ட அக்கட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை:

நடிகர் கமல்ஹாசன் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

கட்சி தொடங்கிய பிறகு அவர் பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார். சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அந்த கட்சி போட்டியிடவில்லை.

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆண்டு தோறும் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறது. மக்களின் குறைகளை நேரில் சந்தித்து அறிந்து கொள்வதற்காக இந்த கூட்டத்தை கமல்ஹாசன் நடத்தி வருகிறார்.

இந்த ஆண்டும் அவர் கிராம சபை கூட்டத்தை நடத்துகிறார். குடியரசு தினமான வருகிற 26-ந்தேதி அன்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடக்கிறது. 650-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த கூட்டத்தை நடத்த அந்த கட்சி முடிவு செய்துள்ளது.

கிராம சபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். கமல்ஹாசன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்தியன்-2 படப்பிடிப்பில் இருப்பதால் அவர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கிராம சபை கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

ஒவ்வொரு கிராமங்களிலும் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்த கூட்டத்தை அந்த கட்சி நடத்துகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு 3-வது ஆண்டு ஆவதையொட்டி வருகிற 21-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆண்டு விழா நடத்தவும் அந்த கட்சி முடிவு செய்துள்ளது.

Tags:    

Similar News