செய்திகள்
தவுபீக், அப்துல் சமீம்

சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை- 2 பயங்கரவாதிகள் மீது உபா சட்டம் பாய்ந்தது

Published On 2020-01-17 09:53 GMT   |   Update On 2020-01-17 09:53 GMT
சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பயங்கரவாதிகள் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

குமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந்தேதி பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, அம்பத்தூரில் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதாகி தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகளில் ஒருவரான அப்துல் சமீம் தனது கூட்டாளி தவுபீக்குடன் சேர்ந்து இந்த கொலையை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து தப்பி ஓடிய இருவரும் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை குமரி மாவட்ட போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை நேற்று இரவு குழித்துறை நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

அப்துல் சமீம், தவுபீக் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் குறிப்பாக தென் மாநிலங்களில் தற்கொலைப் படை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல் போலீசார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து பிடிபட்ட பயங்கரவாதிகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட 2 பயங்கரவாதிகள் மீதும் கடுமையான சட்டமான ‘உபா’ சட்டம் பாய்ந்துள்ளது. நாட்டுக்கு எதிராக சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது இந்த சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் குழுக்கள் மீது மட்டுமே போடப்பட்டு வந்த இந்த சட்டம் இப்போது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படுபவர்களின் மீதும் போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) அதிகாரிகளும், பயங்கரவாதிகளின் பின்னணி குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் சமீப காலமாக தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இதற்காக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தினர். இதனால் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News