செய்திகள்
சென்னை ஐகோர்ட்

முதியவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உடனே செய்ய வேண்டும்- ஐகோர்ட்டு

Published On 2020-01-17 09:03 GMT   |   Update On 2020-01-17 09:03 GMT
62 வயது முதியவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை உடனே செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னையை சேர்ந்த என். கிருஷ்ணன் (62) என்பவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு சிறுநீரகம் இரண்டும் பாதிக்கப்பட்டு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு வாரத்திற்கு 3 முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும். இத்தகையை சூழ்நிலையில மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மியாட் மருத்துவமனையில் உடல் உறுப்பு பொருந்தவில்லை. ஆதலால் அரசின் உடல் உறுப்பு தானம் மையத்தில் 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுநீரகத்திற்காக பதிவு செய்தார். அப்போது அவருக்கு வயது 58.

4 ஆண்டுகளாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த அவருக்கு உடல் உறுப்புதானம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் தனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய உடனடியாக உடல் உறுப்புகளை வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை நீதிபதி சி.வி. கிருஷ்ணன் விசாரித்தார். அரசு தரப்பிலும், தனியார் மருத்துவமனை தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டன.

பொதுவாக உறுப்புகள் தானம் செய்வதில் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்குவது முறையாகும் என்று அரசு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

ஆனால் மனுதாரர் தரப்பில் வாதிடும் போது, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு விண்ணப்பிக்கும் போது கிருஷ்ணனுக்கு 58 வயது என்று குறிப்பிட்டனர். அதனால் தாமதம் செய்யாமல் உடனே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

மியாட் மருத்துவமனை உறுப்புதான பதிவேட்டில் கிருஷ்ணன் முதலிடத்தில் இருந்த போதிலும் அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய சிறுநீரகம் பொருந்தவில்லை. அதனால் வெளியில் இருந்து தான் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு உடல் உறுப்புதான பட்டியலில் அவர் 57 வது இடத்தில் இருந்தார். 60 வயதுக்கு மேற்பட்டோர் பட்டியலில் கிருஷ்ணன் 37 வது இடத்தில் இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கிருஷ்ணனுக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். உடல் உறுப்புகளை தானம் பெற்று வழங்குவதற்கு தமிழகத்தில் வடக்கு, தெற்கு, மத்தியம் என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உடல் உறுப்புகள் வழங்கப்படுகின்றன. கிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனை வடக்கு மண்டலத்தில் இடம் பெற்று இருப்பதால் அந்த மண்டலத்தில் பதிவு செய்ததின் அடிப்படையில் முதலில் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags:    

Similar News