செய்திகள்
எஸ்ஐ வில்சனை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்

சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை - கைதான 2 பயங்கரவாதிகள் நீதிபதி முன்பு ஆஜர்

Published On 2020-01-16 16:28 GMT   |   Update On 2020-01-16 16:28 GMT
சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பயங்கரவாதிகள் குழித்துறை நீதிபதி முன்பு இன்று இரவு ஆஜர்படுத்தப்பட்டனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழக, கேரள போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எஸ்.ஐ. வில்சனை கொன்ற பயங்கரவாதிகள் யார் என போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் ஆய்வு செய்தனர். இதில், நாகர்கோவில், இளங்கடை பகுதியைச் சேர்ந்த தவுபீக் (27), திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம் (29) ஆகியோர் எஸ்.ஐ. வில்சனை கொலை செய்தது தெரிய வந்தது.

தவுபீக், அப்துல் சமீம் இருவரின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், இருவரும் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழக்கில் ஜாமீனில் வந்த இருவரும் பின்னர் தலைமறைவாகி இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் பிடிக்க குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதுபோல கேரளாவிலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பயங்கரவாதிகள் இருவரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

குமரி மாவட்ட தனிப்படை போலீசாருடன், தமிழக கியூ பிரிவு போலீசாரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே டெல்லியில் கடந்த வாரம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் காஜா மொய்தீன், செய்யது அலி நவாஷ், மெகபூப் பாஷா ஆகியோரை தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் செய்யது அலி நவாஷ் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கும், எஸ்.ஐ. வில்சனை கொலை செய்த பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அப்துல் சமீம், தவுபீக் இருவரும் எஸ்.ஐ. வில்சனை கொலை செய்துவிட்டு எங்கு தப்பிச் சென்றனர் என்பது பற்றி செய்யது அலி நவாஷ் மற்றும் அவருடன் கைதான காஜா மொய்தீன் ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டது. இதில், அப்துல் சமீம், தவுபீக் இருவரும் களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது.

பயங்கரவாதிகள் இருவரும் கர்நாடகா சென்றதை அறிந்த தமிழக கியூ பிரிவு போலீசார் கர்நாடகா போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தனர். அவர்கள், கர்நாடகாவின் முக்கிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில், உடுப்பி ரெயில் நிலையத்தில் அப்துல் சமீம், தவுபீக் இருவரும் நிற்பதை கண்டனர். அவர்களை உடனடியாக பிடித்த கர்நாடகா போலீசார் அதனை தமிழக போலீசாருக்கு தெரிவித்தனர்.

தமிழக போலீசார், உடுப்பியில் கைதான அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் அழைத்து வர உடுப்பி விரைந்தனர். குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் மற்றும் 2 டி.எஸ்.பி.க்கள், ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 20 பேர் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலையில் உடுப்பி சென்று அடைந்தனர். அங்கு கர்நாடகா போலீசாரிடம் இருந்து அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் மீட்டு குமரி மாவட்டம் அழைத்து வந்தனர்.

இன்று அதிகாலை 5 மணிக்கு எஸ்.பி. ஸ்ரீநாத் தலைமையிலான போலீசார் நாகர்கோவில் வந்து சேர்ந்தனர். அதன்பின், பயங்கரவாதிகள் இருவரையும் களியக்காவிளை அழைத்துச் சென்றனர். அங்கு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு அவர்கள் இருவரையும் தக்கலையில் உள்ள ஏ.எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு தமிழக கியூ பிரிவு போலீசாரும் அப்துல் சமீம், தவுபீக் இருவரிடமும் பயங்கரவாத தொடர்புகள் குறித்து விசாரித்தனர்.

சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். கோர்ட்டுக்கு இன்று விடுமுறை என்பதால் குழித்துறை கோர்ட்டு வளாகத்தில் உள்ள முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு பயங்கரவாதிகள் இருவரையும் ஆஜர்படுத்தினர். இவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News