செய்திகள்
சுப.வீரபாண்டியன்

ரஜினிகாந்த் கருத்துக்கு சுப.வீரபாண்டியன் எதிர்ப்பு

Published On 2020-01-16 10:40 GMT   |   Update On 2020-01-16 10:40 GMT
முரசொலி குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு சுப வீரபாண்டியன் எதிர்ப்பு தெரிவித்தார். செய்திகளை ரஜினிகாந்த் திரித்துக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிகை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் பேசினார். அப்போது அவர், ‘முரசொலி பத்திரிகையை கையில் வைத்திருந்தால் தி.மு.க. கட்சிக்காரர்கள் என்று கூறி விடலாம். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று கூறலாம்’ என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு தி.மு.க.வினர் ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ரஜினியின் கருத்துக்கு சுப.வீரபாண்டியனும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, ‘1971 ஆண்டு சேலத்தில் பெரியார், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலைக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப் போனார்’ என்று பேசியுள்ளார்.

‘அதனை எதிர்க்க வேறு எந்தப் பத்திரிகைக்கும் தைரியம் இல்லாதபோது, சோ சார், துணிச்சலா அட்டைப்படத்துலையே போட்டு விமர்சிச்சார்’ என்றும் பேசியுள்ளார்.

யார் ஒருவருக்கும் தன் கருத்தைச் சொல்ல உரிமை உண்டு. ஆனால் செய்திகளை மாற்றிச் சொல்லவும், திரித்துச் சொல்லவும் யாருக்கும் உரிமையில்லை. ரஜினி அதனைத்தான் செய்திருக்கிறார்.

அந்த மாநாட்டிற்குத் தடை கோரி, அன்றைய ஜனசங்கம் கட்சியினர் (இன்றைய பா.ஜனதா) கருப்புக் கொடி காட்டினர். அந்த போராட்டத்திற்கு அனுமதி கொடுத்ததும் கலைஞர் அரசுதான்.

கறுப்புக்கொடி காட்ட அங்கே கூடிய அந்தச் சிறு கூட்டத்தினரிடமிருந்து ஒருவர், பெரியாரை நோக்கிச் செருப்பெடுத்து வீசினார். அது அவரின் பின்வந்த ஒரு வண்டியில் போய் விழுந்தது. அந்த வண்டியில்தான் ராமர், சீதை படங்கள் இருந்தன.

செருப்பை எடுத்து வீசியவர்கள் பற்றி ரஜினி எதுவும் பேசவில்லை. அந்தக் கயமைத்தனத்தைக் கண்டிக்க அவருக்குத் துணிவில்லை. ஆனால் பிறகு நடந்த நிகழ்வைத் திரித்துக் கூறுகின்றார்.

ரஜினியைப் போலவே தான் ‘சோ சாரும்’ செய்தியைத் திரித்து அட்டையில் வெளியிட்டார். அதனைக் கலைஞர் கைகொட்டிச் சிரிப்பதைப் போலவும் அட்டைப்படம் போட்டார். அதனால்தான் அது தடை செய்யப்பட்டது.

இது தெரியாமல், அந்த வீராதி வீரர் திரும்ப அச்சிட்ட துக்ளக் பிளாக்கில் விற்பனையானது என்கிறார். தர்பார் படம் டிக்கெட்தான் பிளாக்கில் விற்கிறது என்று நாம் நினைத்தால், அப்போதே ‘சிஸ்டம் கெட்டுவிட்டது’ போலும்.

அப்போது நடந்த தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. சோ சார் ஆதரித்த காங்கிரஸ் கட்சியும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் படுதோல்வி அடைந்திருந்தன. எந்த சேலத்தில் அந்த நிகழ்வு நடைபெற்றதோ, அதே சேலத்தில் இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றது.

இவை எல்லாம் நம்மில் பலருக்கு இயல்பாகத் தெரியும். பிறகு ஏன் ரஜினிக்கு மட்டும் தெரியவில்லை?

விடுதலை, முரசொலி படிப்பவர்களுக்கு நாட்டின் நடப்பும், உண்மைகளும் தெரியும். துக்ளக் மட்டும் படிக்கும் அறிவாளிகளுக்கு வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News