செய்திகள்
தனவேலு எம்எல்ஏ

புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து சஸ்பெண்ட்- மாநில தலைவர் நமச்சிவாயம் அறிவிப்பு

Published On 2020-01-16 07:36 GMT   |   Update On 2020-01-16 07:36 GMT
அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறிய புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளார். முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்வதாகவும், மிக மோசமான ஆட்சி புதுவையில் நடக்கிறது என்றும் தனவேலு எம்.எல்.ஏ. விமர்சித்திருந்தார்.

மேலும் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தார். புதுவை கவர்னர் கிரண்பேடியை நேரில் சந்தித்தும் காங்கிரஸ் அரசு மீது ஊழல் புகார் அளித்தார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அவரது மகனும் நில ஊழலில் ஈடுபட்டுள்ளதை ஆதாரத்துடன் சி.பி.ஐ.யிடம் கொடுக்க போவதாகவும் அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சி புனிதமான கட்சி என்றும் கட்சியை விட்டு தான் ஒருபோதும் விலக மாட்டேன் என்றும், வேண்டுமானால் கட்சி தன் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் தனவேலு கூறி இருந்தார்.

தனவேலு எம்.எல்.ஏ.வின் புகாரை காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் ஒன்றிணைந்து எதிர்த்தனர். எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியுடன் இணைந்து ஆட்சியை மாற்றம் செய்ய தனவேலு முயற்சிக்கிறார். பா.ஜனதாவின் ஏஜெண்டாக செயல்படுகிறார் என தனவேலுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விமர்சித்திருந்தனர்.


இதனிடையே டெல்லி சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் ஆகியோர் கட்சி தலைமையிடம் தனவேலு எம்.எல்.ஏ. செயல்பாடு குறித்து புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து புதுவை திரும்பிய மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தனவேலு எம்.எல்.ஏ.வை அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் சஸ்பெண்டு செய்வதாக அறிவித்தார்.

மேலும் தனவேலுவிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்படும். கட்சி விதிமுறைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழு அவரின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். 

Tags:    

Similar News