செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

பொன் ராதாகிருஷ்ணன் மந்திரியாக இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தார்?- ஜெயக்குமார் கேள்வி

Published On 2020-01-15 07:24 GMT   |   Update On 2020-01-15 07:24 GMT
5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்தபோது பொன் ராதாகிருஷ்ணன் தமிழகத்துக்கு என்ன செய்தார்? என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை:

‘தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரம் என்று நான் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே கூறிவருகிறேன்’ என்று பா.ஜனதாவின் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் இருந்து தொடர்ச்சியாக அரசை குற்றம் சொல்வதே பொன் ராதாகிருஷ்ணனுக்கு வேடிக்கையாகவும், வாடிக்கையாகவும் இருக்கிறது. எனவே அவரது கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. அவரது கருத்தை பா.ஜனதாவின் கருத்தாக நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை.

போக்குவரத்து துறையில் இந்தியாவிலேயே குறைந்த எண்ணிக்கையில் விபத்துகள் நடைபெற்ற மாநிலம் என்ற அடிப்படையில் மத்திய அரசு தமிழக அரசுக்கு விருது வழங்கியுள்ளது. பயங்கரவாத செயல் ஒடுக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டது. பொதுமக்கள் சிறப்பாக, பாதுகாப்பாக வாழக்கூடிய மாநிலம், மகளிருக்கு முழுமையான பாதுகாப்பு, சாதி-மத மோதல்கள் இல்லை. சட்டம்- ஒழுங்கை சிறப்பாக பேணிக் காக்கின்ற மாநிலம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிக்கு அங்கீகாரம் கொடுத்தது யார்? மத்திய அரசு.

அவர்கள் ஒரு அளவுகோல் வைத்துள்ளனர். அதன்படி, அதிக மதிப்பெண் பெற்றது தமிழகம்தான். அதனால் மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. மத்திய அரசு சார்ந்த கட்சியில் தானே பொன் ராதாகிருஷ்ணன் இருக்கிறார். அப்படியானால், இவரது குற்றச்சாட்டு மத்திய அரசை எதிர்த்தா? என்று அவரை நான் கேட்கிறேன்.

பொன் ராதாகிருஷ்ணன் 5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்தார். எவ்வளவோ திட்டங்களை கொண்டுவந்து இருக்கலாம். ஆனால் ஒரு திட்டம் கூட இவரால் இங்கே கொண்டுவர முடியவில்லை. அவர் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அவர் கட்சியில் அவருக்கு தலைவர் பதவி கிடைக்குமோ? கிடைக்காதோ? அவரது கட்சியைத்தான் கேட்க வேண்டும். நான் என்ன ஜோசியமா சொல்ல முடியும்.

அவர் எங்கோ இருக்கும் கோபத்தை எங்கள் மீது ஏன் காட்ட வேண்டும்? எனவே அவரது கருத்தை ஒரு விரக்தியின் வெளிப்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம். மத்திய அரசின் கருத்தாகவோ, பா.ஜனதாவின் கருத்தாகவோ நாங்கள் கருதவில்லை.

தி.மு.க. ஆட்சியில் பயங்கரவாதம் எவ்வளவு தலைதூக்கியது? பத்மநாபா போன்ற பல போராளிகள் சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டனர்.

ஆனால், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் வடக்கே பாபர் மசூதி பிரச்சினை ஏற்பட்டால் கூட தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. எனவே, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பயங்கரவாதம் தலைதூக்காது. பயங்கரவாதத்தை வேரோடு வேராக அகற்றும் ஆட்சியும் இயக்கமும்தான் அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும். பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் தமிழகத்தில் இடமே கிடையாது.

ஆனால், சமூக விரோதிகளையும், பயங்கரவாதிகளையும் ஊக்கப்படுத்துகிற கட்சி தி.மு.க.தான். அதை பொன் ராதாகிருஷ்ணன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே உண்மைக்கு மாறான அவரது குற்றச்சாட்டு விரக்தியின் உச்சக்கட்டம்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News