செய்திகள்
டிஆர் பாலு

கேஎஸ் அழகிரி கருத்தால் சோனியா தலைமையிலான கூட்டம் புறக்கணிப்பு- டிஆர் பாலு பேட்டி

Published On 2020-01-15 05:50 GMT   |   Update On 2020-01-15 05:50 GMT
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடர்வது குறித்து காலம் பதில் சொல்லும் என்றும், கே.எஸ்.அழகிரி கருத்தால் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை தி.மு.க. புறக்கணித்ததாகவும் டி.ஆர்.பாலு எம்.பி. கூறினார்.
சென்னை:

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இலைமறை காயாக இருந்த இந்த பிரச்சினை, மறைமுகத் தேர்தலின்போது வெளிச்சத்துக்கு வந்தது. தி.மு.க., கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரடியாக குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார். மறைமுகத் தேர்தலிலும் தி.மு.க.வை விட கூடுதல் இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது.

அதாவது, மறைமுக வாக்கெடுப்பின்போது, தி.மு.க.வை காங்கிரஸ் கைவிட்டது வெளிப்படையாகவே தெரிந்தது. இது தி.மு.க. தலைமையை கோபம் கொள்ளச் செய்தது. குறிப்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில்தான், குடியுரிமை திருத்த சட்டம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதலில் தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது.

இந்த நிகழ்வின் மூலம், காங்கிரஸ் தலைமை மீது தி.மு.க. அதிருப்தியில் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

இதற்கிடையே, கட்சித் தலைமை கே.எஸ்.அழகிரியை கண்டித்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் திடீரென அவசர அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார். அதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை கட்சித் தலைமை நேற்று காலை அவசரமாக அழைத்ததை தொடர்ந்து அவர் டெல்லி சென்றார். அங்கு சோனியாகாந்தியை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார்.

இந்த பரபரப்புக்கு இடையே தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கை வெளிவந்த பிறகு தி.மு.க. தொண்டர்கள் என்னிடமும், கட்சித் தலைவர் மற்றும் மூத்த நிர்வாகிகளிடமும், நேரில் பார்க்கும்போதும், தொலைபேசி மூலமும், இப்படி ஒரு அறிக்கை வந்துள்ளது, எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது, காங்கிரஸ் கட்சி நம் கூட்டணியில் தான் இருக்கிறதா? என்று கேட்டார்கள்.

நிர்வாகிகள் அவ்வாறு கேட்டபோது, கே.எஸ்.அழகிரி இதுபோன்ற அறிக்கையை தவிர்த்திருக்கலாமே என்று எனது கருத்தை தெரிவித்தேன்.

தவறான, மோசமான அறிக்கையை காங்கிரஸ் தலைவர் வெளியிட்டு இருக்கிறாரே என்று தி.மு.க. தொண்டர்கள் கவலையில் இருந்தனர்.

கூட்டணி தர்மத்தை நம் தலைவர் (மு.க.ஸ்டாலின்) காக்கவில்லை என்று சொல்கிறார்களே, இது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு என்றனர். இது எங்கள் தலைவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகவே கருதுகிறோம்.

ஆகவே, டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறதா என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News