செய்திகள்
பிரதமர் மோடி

முடியாது என்று நினைத்ததெல்லாம் நிறைவேறி கொண்டிருக்கிறது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

Published On 2020-01-14 20:42 GMT   |   Update On 2020-01-14 20:42 GMT
இந்தியாவில் முடியாது என்று நினைத்ததெல்லாம் தற்போது நிறைவேறிக் கொண்டிருக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
சென்னை:

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த துக்ளக் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் பேசியதாவது:-

இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. உலகம் முழுவதும் வாழும் தமிழ் சமுதாயத்தினர் பொங்கல் கொண்டாடும் இந்த திருநாளில் துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. துக்ளக் ஆசிரியராக இருந்த சோ இன்று நம் மத்தியில் இல்லாவிட்டாலும், கடந்த 50 ஆண்டுளாக அவர் ஆற்றிய பணிகள் பெருமைக்குரியவை. முதல் பக்கத்தில் வரும் கேலிச் சித்திரம், மக்களுக்கு எளிய முறையில் பல விஷயங்களை புரியச் செய்துவிடும்.

நாட்டுக்கு வழிகாட்டும் விளக்காக தமிழகம் பல நூற்றாண்டுகளாக திகழ்கிறது. பொருளாதார முன்னேற்றம், சமுதாய சீர்திருத்தங்கள், உலகத்தின் மிகத் தொன்மையான மொழியின் இருப்பிடம் போன்றவை தமிழ்நாட்டின் சிறப்பு. முக்கிய விழாக்களில் நான் தமிழில் சில வார்த்தைகளை உச்சரிப்பது உண்டு. இது மிகுந்த பெருமைப்படுவதாக பலரும் என்னிடம் தெரிவித்து வருகின்றனர்.

இரண்டு மிகப் பெரிய ராணுவ தொழிற்சாலை வழித்தடங்களை இந்தியாவில் கொண்டு வர திட்டமிட்டபோது அதில் தமிழகம் தேர்வு செய்யப்பட்டது. இதன் மூலம் அதிக தொழிற்சாலைகளை தமிழகம் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஜவுளித் தொழில் அதிக பங்களித்துள்ளது. எனவே இதற்கு மத்திய அரசு நிதியுதவிகளை செய்து நவீனப்படுத்தி வருகிறது.

மீன்வளம் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இதை மேலும் உயர்த்த மத்திய அரசு விருப்பம் கொண்டுள்ளது. இதில் தொழில்நுட்ப மேம்பாடு, நிதி உதவி, மனிதவள மேம்பாடு ஆகியவற்றை ஏற்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பாகக்கூட ஆழ்கடல் மீன்பிடி படகுகள், தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டன.

எதிர்ப்புகளையும் தாண்டி இந்தியாவின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களில் பட்டியல் மிக நீளமானது. இந்த நாட்களில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. முடியாதது என்று நினைத்ததெல்லாம் தற்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே மக்களை தவறாக நடத்தி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News