செய்திகள்
கோப்பு படம்

வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக 17 பேரிடம் ரூ.2¾ லட்சம் மோசடி

Published On 2020-01-13 09:54 GMT   |   Update On 2020-01-13 09:54 GMT
அஞ்சுகிராமம் அருகே வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக 17 பேரிடம் ரூ.2¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

அஞ்சுகிராமம் அழகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் எட்வின் பிரபுதாஸ் (வயது 26).

இவர் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக முயற்சி செய்துவந்தார். இந்த நிலையில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அறிமுகமானார். அவர் குவைத் நாட்டில் உள்ள எண்ணை நிறுவனத்தில் வேலைக்கு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து தருவதாக கூறினார்.

மேலும் அதற்காக ரூ.16 ஆயிரம் செலவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். அங்கு வேலைக்கு மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம் பெற்றுத்தருவதாக கூறினார். இதனை நம்பிய எட்வின் பிரபுதாஸ் அந்த வாலிபரிடம் ரூ.16 ஆயிரம் கொடுத்தார்.

பின்னர் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்தார். போனில் தொடர்பு கொண்டு பேசியபோது முறையான பதிலும் தெரிவிக்கவில்லை. எனவே பணத்தை திரும்பித் தருமாறு கேட்டார். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவந்தார்.

இதனால் எட்வின்பிரபு தாஸ் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் எட்வின் பிரபுதாசை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக ஏமாற்றியது வி.கே.புரம் பகுதியை சேர்ந்த ஜெயதேவ ஜஸ்டஸ் என்பது தெரிய வந்தது.

மேலும் இவர் நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தில் 17 பேரிடம் இதேபோல் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2 லட்சத்து 88 ஆயிரம் மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News