செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்தார்

வில்சன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி

Published On 2020-01-13 06:37 GMT   |   Update On 2020-01-13 08:18 GMT
களியக்காவிளை சோதனைச்சாவடியில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வில்சனின் குடும்பத்தாரிடம் ரூ.1 கோடி நிதியை முதலமைச்சர் எடப்படி பழனிசாமி வழங்கினார்.
சென்னை:

தமிழ்நாடு-கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினருக்கு சிறப்பினமாக தமிழ்நாடு அரசின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை இன்று தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் வழங்கினார்.

இன்று தலைமைச் செயலகத்தில், 2019-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் 20.12.2019 முதல் 22.12.2019 வரை நடைபெற்ற தேசிய தீயணைப்பு விளையாட்டுகள் மற்றும் தீயணைப்பு சேவை விளையாட்டு போட்டிகளில் 15 தங்கம், 18 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை வென்ற 33 தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பதக்கங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.

நிகழ்ச்சியில், புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், தலைமைச் செயலாளர் சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி கூறியதாவது:-

எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நிகழக்கூடாது.  ரூ.1 கோடி நிதி வழங்கிய முதல்வர் எனது மூத்த மகளுக்கு தகுந்த அரசு வேலை தருவதாக தெரிவித்துள்ளார்.  எனது கணவரை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து  உரிய தண்டனை பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News