செய்திகள்
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் மோதல்

மறைமுகத் தேர்தலில் மோதல்... முறைகேடு நடப்பதாக மாறி மாறி புகார்

Published On 2020-01-11 08:52 GMT   |   Update On 2020-01-11 08:52 GMT
உள்ளாட்சி மறைமுகத் தேர்தலின்போது இன்று பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. முறைகேடு நடப்பதாக அரசியல் கட்சியினர் மாறி மாறி புகார் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய துணைத்தலைவர்கள் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர்கள் ஆகியோரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.

மதிய நிலவரப்படி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்களில் அதிமுக 14 இடங்களிலும்,  திமுக 12 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.  இதேபோல் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 136 இடங்களிலும், 119 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.

இந்த தேர்தலின்போது ஒரு சில இடங்களில் பிரச்சினை மற்றும் மோதல் ஏற்பட்டது. முறைகேடு நடப்பதாக மாறி மாறி புகார் தெரிவித்தனர். மோதல் காரணமாக சில இடங்களில் தேர்தல் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றியத்தில் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு தரப்பு திமுக கவுன்சிலர்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் நிலை ஏற்பட்டது.

* ராமநாதபுரம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

* மதுரையில் 12-வது வார்டு அதிமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அதிமுக தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

* விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் ரகளை ஏற்பட்டது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அதிமுக வெற்றியை அறிவிக்க மறுப்பதாக புகார் தெரிவித்தனர்.



* தர்மபுரி  மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் அலுவலர் மயக்கமடைந்தார். அவரை போலீஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் திமுக தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். திமுக வேட்பாளரின் வெற்றியை அறிவித்து விட்டு செல்லுமாறு தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

*  பரமக்குடி போவளூர் ஒன்றியத்தில் வாக்குப்பெட்டியின் உள்ளே மை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதிமுக, திமுக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Tags:    

Similar News