செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்துள்ள கரும்புகள்

பொங்கலுக்காக கோயம்பேடு சந்தையில் குவியும் கரும்புகள்

Published On 2020-01-10 08:36 GMT   |   Update On 2020-01-10 08:36 GMT
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடலூர், மதுரை மாவட்டத்தில் இருந்து கரும்புகள் லாரிகளில் வருவது வழக்கம். பொங்கலுக்கு இன்னும் 4 நாட்கள் இருப்பதால் குறைந்த அளவில் கரும்புகள் வந்துள்ளது.
போரூர்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை செயல்படுகிறது. இந்த சந்தையில் பொதுவாக பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை செய்யப்படுகிறது.

கடலூர், மதுரை மாவட்டத்தில் இருந்து கரும்பு லாரிகளில் வருவது வழக்கம். பொங்கலுக்கு இன்னும் 4 நாட்கள் இருப்பதால் குறைந்த அளவில் கரும்பு வந்துள்ளது.

கடலூர் மாவட்டம் சேந்தியாத்தோப்பில் இருந்து லாரிகளில் கரும்பு கட்டுகள் வந்து குவிந்துள்ளன. மஞ்சள் கொத்து ஒரு வேனில் மட்டுமே வந்துள்ளது. 20 கரும்புகள் கொண்ட கட்டின் விலை ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது. மஞ்சள் கொத்து ரூ.60-க்கும், வாழைத்தார் ரூ.120 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பு சந்தை தொடங்கிய போதும் இன்னும் வியாபாரிகள் அதிகமாக வரவில்லை. பொதுமக்களும் குறைவாக வருவதால் வியாபாரம் மந்தமாக உள்ளது.

இதுபற்றி கரும்பு வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த வருடம் கரும்பு விளைச்சல் அதிகமாக உள்ளதால் 700 லாரிகளில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் கரும்பு விலை குறையும். கட்டு ரூ.150, ரூ.200-க்கு விற்பதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. திங்கட்கிழமை முதல் கரும்பு வரத்து அதிகமாக இருக்கும். இப்போது விலை உயர்வாக இருந்தாலும் படிப்படியாக குறையும்.

சிறப்பு சந்தையில் ஒரு லாரி கொண்டுவருவதற்கு வாடகை ரூ.1500-ம், நுழைவு கட்டணமாக 12 மணி நேரத்துக்கு ரூ.190-ம் வசூலிக்கிறார்கள். அதிகமான தொகை வசூலிப்பதால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. சிறப்பு சந்தையில் வாடகை, நுழைவு கட்டணம் குறைவாக வசூலித்தால் கரும்பு, மஞ்சள் விலை குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கல் சந்தை ரூ.13 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. வியாபாரிகள் அதிகம் வராததால் மந்தமாக காணப்படுகிறது. திங்கட்கிழமைக்கு மேல் வியாபாரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News