செய்திகள்
சென்னை துறைமுகத்தில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கொடியசைத்து தொடங்கி வைத்தபோது எடுத்த படம்

பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்தியாவின் சொத்து - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் சொல்கிறார்

Published On 2020-01-09 23:40 GMT   |   Update On 2020-01-09 23:40 GMT
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை லாபநோக்கம் உள்ள நிறுவனமாக கொண்டு வருவதுதான் பிரதான திட்டம் என்றும், இந்த நிறுவனம் இந்தியாவின் சொத்து என்றும் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசினார்.
சென்னை:

சென்னை-அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு இடையே ஆழ்கடல் வழியாக ‘பைபர் கேபிள்’ (கண்ணாடி இழை வடம்) பதிக்கும் பணி 2 ஆயிரத்து 250 கிலோ மீட்டர் தொலைவில், ரூ.1,224 கோடி செலவில் நடைபெறுகிறது. வருகிற ஜூன் மாதத்துக்குள் இந்த பணி நிறைவு பெற உள்ளது.

இதன் மூலம் அதிவேக இணையதள வசதி சேவையை அந்தமான் நிக்கோபார் மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகள் பெற முடியும்.

இந்த பணி தொடர்பான நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தலைமை தாங்கினார். இதில் அந்தமான் நிக்கோபார் தீவு துணைநிலை கவர்னர் தேவேந்திரகுமார் ஜோஷி, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பிரவீண்குமார் புர்வார், இயக்குனர் பி.எல்.வர்ஷினே, தலைமை பொது மேலாளர் (சென்னை) சந்தோசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:-

அந்தமான் இந்தியாவின் தொன்மைமிக்க இடமாக உள்ளது. இந்தியாவை விட்டு சற்று விலகி இருந்தாலும், உணர்வுப்பூர்வமான தொடர்பு அந்தமானுக்கு உள்ளது. அந்த தொடர்பை இன்றைய நிகழ்வு மேலும் வலுப்படுத்தி இருக்கிறது. அந்தமானை ஒரு குட்டி இந்தியாவாக பார்க்க முடியும். ஏனென்றால், அனைத்து தரப்பு மக்களும் அங்கு இருக்கின்றனர்.

அங்கு தற்போது செயற்கைக்கோள் மூலம் இணையதள வசதி பெறுகிறார்கள். இனி பைபர் கேபிள் மூலம் 4 ஆயிரம் சதவீத அதிவேக இணையதள வசதியை பெற உள்ளனர். அடுத்தகட்டமாக ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான மதிப்பில் கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்கு பைபர் கேபிள் பதிக்கும் பணி நடைபெற உள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்தியாவின் சொத்து. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயற்கை பேரிடர் காலங்களில் பி.எஸ்.என்.எல். சேவைதான் மிகவும் உதவியது. இது அனைவருக்கும் தெரியும்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் லாப நோக்கம் கொண்டது அல்ல. ஆனால் அதை லாபநோக்கம் உள்ள நிறுவனமாக கொண்டு வருவதுதான் என்னுடைய பிரதான திட்டம். இதற்கு பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் உதவி புரிவார்கள் என நம்புகிறேன்.

இந்தியா பெரிய டிஜிட்டல் மையமாக இந்தியா மாறியதால் உலகமே நம்மை திரும்பி பார்க்கிறது. 2014-ல் இந்தியாவில் 2 செல்போன் உற்பத்தி நிறுவனங்கள்தான் இருந்தன. தற்போது 268 செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் இந்தியா உலகத்திலேயே 2-வது பெரிய செல்போன் உற்பத்தி நிறுவனங் களை கொண்ட நாடாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கிண்டி ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, ஆழ்கடலில் பைபர் கேபிள் பதிக்கும் பணியை சென்னை துறைமுகத்தில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் சென்னை துறைமுக சபைத்தலைவர் பி.ரவீந்திரன், துணைத்தலைவர் சிரில்ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். 
Tags:    

Similar News