செய்திகள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

மறைமுக தேர்தல் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் -தேர்தல் ஆணையம்

Published On 2020-01-09 08:36 GMT   |   Update On 2020-01-09 09:19 GMT
மறைமுகத் தேர்தல் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
மதுரை:

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் லலிதா. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது ஒன்றிய குழு தலைவர், துணைத்தலைவர் பதவிக்காக வருகிற 11-ந் தேதி மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே தேர்தல் நடவடிக்கைகளை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைச்சாமி, ரவீந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அனைத்து இடங்களிலும் ஏன் வீடியோ பதிவு செய்யக்கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும் மறைமுக தேர்தலை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து மாநில தேர்தல் ஆணைய வக்கீல், அனைத்து இடங்களிலும் மறைமுக தேர்தல் தொடர்பாக வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக இன்றே அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படும் என்றார்.
Tags:    

Similar News