செய்திகள்
பொங்கல் பரிசுடன் இல்லத்தரசிகள்

பொங்கல் பரிசு - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

Published On 2020-01-09 07:44 GMT   |   Update On 2020-01-09 07:44 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ஏழை எளியவர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இல்லத்தரசிகள் கூறினர்.
சென்னை:

எழும்பூர், புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, புரசைவாக்கம், பெரியமேடு, வியாசர்பாடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொங்கல் பரிசு வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் திரண்டிருந்தது. ரூ.1000த்துடன் பொங்கல் பரிசு பெற்ற பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் கூறியதாவது:-

கவுசல்யா, புதுப்பேட்டை:- நான் கூலி வேலை செய்து வருகிறேன். எந்த வருமானமும் இல்லாத எனக்கு இந்த பொங்கல் பரிசு மிகுந்த உதவியாக இருக்கிறது. ஆதரவற்ற பெண்களுக்கு கிடைக்கும் உதவித்தொகை போல இதை கருதுகிறேன். பொங்கலை கொண்டாடுவதற்கு வெல்லம், பச்சரிசி கொடுத்தாலும் அதோடு சேர்த்து ரொக்கப்பணமும் கொடுப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது பொங்கல் செலவுக்கு மட்டுமின்றி எனக்கு ஆகும் மருத்துவ செலவுக்கும் உதவியாக இருக்கும்.

பவித்ரா கல்லூரி மாணவி:- நான் பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன். எனது தந்தை ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ஏழை குடும்பமான எங்களுக்கு இந்த பொங்கல் பரிசு பயனுள்ளதாக அமைந்துள்ளது. பொங்கலை இந்துக்கள் மட்டும்தான் கொண்டாட வேண்டும் என்றில்லாமல் அனைவரும் கொண்டாடும் வகையில் இந்த அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதை வரவேற்கிறேன். இந்த பொங்கல் தொகுப்பு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். இந்த மகிழ்ச்சி எல்லோரும் அடைய வேண்டும். அதுதான் எனது விருப்பம்.

ஜெயலட்சுமி புதுப்பேட்டை:- பொங்கல் கொண்டாட பொங்கல் வைக்கும் பொருட்களுடன் ரொக்கமும் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களைப் போன்ற ஏழை குடும்பங்களுக்கு மிகுந்த உதவியாக உள்ளது. ஒரு சில முக்கியமான செலவுகளை இதன் மூலம் சமாளிப்பேன்.

தனபாய்:- எனக்கு 72 வயது ஆகிறது. காலை 6 மணிக்கு வந்து வரிசையில் நின்றேன். 9 மணிக்கு கடை திறந்ததும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வாங்கினேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் கடையில் நின்ற மக்கள் கூட்டத்தில் என்னை தள்ளிவிட்டனர். எனவே என் போன்ற வயதானவர்களுக்கு தனி வரிசை ஒதுக்கி நெரிசலில் சிக்காமல் பொங்கல் பரிசு பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுதா (சிந்தாதிரிப்பேட்டை) :- எனது கணவர் எலக்ட்ரீசன் வேலை பார்த்து வருகிறார். எங்களது பிள்ளைகளின் படிப்புக்காக ரே‌ஷன் கார்டை சர்க்கரை கார்டாக மாற்றினோம். அதனை அரிசி கார்டாக மாற்ற தவறிவிட்டோம். எனவே எங்களுக்கு ரூ.1000 ரொக்கப் பணம் கிடைக்கவில்லை. இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழக அரசு மேலும் அவகாசம் கொடுத்து எங்களுக்கு ரூ.1000-த்துடன் பொங்கல் பரிசு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

லட்சுமணன் (சேப்பாக்கம்):- ஒரு ரூபாய் என்றாலும் பணம் பணம்தான். பொங்கலுக்காக ரூ.1000, பரிசு பொருட்கள் கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதிகாலை 4 மணிக்கே வந்து வரிசையில் நின்று முதல் ஆளாக இந்த பரிசுகளை வாங்கிச் செல்கிறேன்.

Tags:    

Similar News