செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்

Published On 2020-01-08 10:36 GMT   |   Update On 2020-01-08 10:36 GMT
கும்பகோணம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
கும்பகோணம்:

கும்பகோணம் ஏ.ஆர்.ஆர் ரோடு பகுதியில் வெளிமாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து பதுக்கி வைத்து மர்ம நபர்கள் விற்பனை செய்து வருவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின்பேரில் சிறப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு மாறுவேடத்தில் சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் அங்கும் இங்கும் சுற்றி வந்தனர். இதையடுத்து அதிரடியாக அந்த பகுதியில் உள்ளே புகுந்து சோதனை செய்தனர்.

அப்போது அங்குள்ள நகராட்சிக்கு சொந்தமான பொது கழிவறையில் வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆயிரத்து 675 மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடித்தனர். இதையடுத்து சிறப்பு படை போலீசார் அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கும்பகோணம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை கடத்தி வந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News