செய்திகள்
சென்னை ஐகோர்ட்

நித்யானந்தா சீடருக்கு எதிரான ஆட்கொணர்வு மனு ஐகோர்ட்டில் முடித்து வைப்பு

Published On 2020-01-07 03:29 GMT   |   Update On 2020-01-07 03:29 GMT
நித்யானந்தா ஆசிரமத்தில் தனது விருப்பப்படியே தங்கியிருப்பதாக சீடர் பிராணானந்தா கூறியதையடுத்து, ஆட்கொணர்வு மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
சென்னை:

ஈரோட்டை சேர்ந்தவர் அங்குலட்சுமி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘கர்நாடக மாநிலத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல் டாக்டரான எனது மகன் கடந்த 2003-ம் ஆண்டு சேர்ந்தார். அங்கு அவருக்கு பிராணானந்தா என பெயர் சூட்டியுள்ளனர்.

சமீபத்தில் நித்யானந்தா ஆசிரமத்தில் சீடர்கள் சிலர் தாக்கப்பட்டனர். எனது மகனை சந்திக்க சென்றபோது, எனக்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள எனது மகனை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவி உடையில் நித்யானந்தா சீடர் பிராணானந்தாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அப்போது, தனது விருப்பப்படியே நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகவும், யாரும் தன்னை கட்டாயப்படுத்தி சட்டவிரோதமாக பிடித்து வைக்கவில்லை என்றும் கூறினார். இதையடுத்து, அவரை விருப்பப்படி செல்ல அனுமதி வழங்கிய நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News