செய்திகள்
ரேசன் அரிசி

பட்டுக்கோட்டை அருகே ரேசன் கடையில் துர்நாற்றம் வீசிய அரிசி வழங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2020-01-06 10:03 GMT   |   Update On 2020-01-06 10:03 GMT
பட்டுக்கோட்டை வட்டம் ஆலத்தூர் ரேசன் கடைகளில் மழையில் நனைந்த துர்நாற்றம் வீசும் இலவச அரிசி விநியோகிக்கப்பட்டதால் அதை வாங்கிய பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பட்டுக்கோட்டை:

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆலத்தூர் ஏழை விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த ஊராட்சி ஆகும். இந்த ஊரில் 2 ரேசன் கடைகள் இயங்குகின்றன.

ஆலத்தூர் கூட்டுறவு சங்கம் 1,200 பேருக்கும், பிரதான சாலையில் நூலகம் அருகிலுள்ள ரேசன்கடையில் சுமார் 550 பேருக்கும் மாதந்தோறும் இலவச அரிசி விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் 2 கடைகளிலும் நடப்பு ஜனவரி மாதத்திற்கான இலவச அரிசி நேற்று காலை விநியோகிக்கப்பட்டது. வழங்கப்பட்ட அரிசி ஈரப்பதத்துடன், துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி ரேசன் கடை ஊழியர்களிடம் பொது மக்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய விற்பனையாளர் ‘‘அரசால் எங்களுக்கு அனுப்பப்பட்ட அரிசியை தான் விநியோகிக்கிறோம். எங்கள் மீது எந்த தவறும் இல்லை’’ என்று கூறினார். ஆனால் அதை ஏற்காத மக்கள் தொடர்ந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அரிசி மிகவும் மோசமாக இருந்த போதிலும், வேறு வழியின்றி கூட்டுறவு சங்கம் அருகில் உள்ள கடையில் சுமார் 500 பேரும், நூலகம் அருகில் உள்ள கடையில் சுமார் 150 பேரும் வாங்கிச் சென்றனர்.

விநியோகிக்கப்பட்ட தரமற்ற அரிசிக்கு பதிலாக, தரமான அரிசியை உடனடியாக வழங்க வேண்டும், இனியாவது கிராமங்களுக்கு அனுப்பப்படும் அரிசியை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் முறையாக ஆய்வு செய்து அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News