செய்திகள்
வெங்காயம்

கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை ரூ.50 ஆக குறைந்தது

Published On 2020-01-06 08:47 GMT   |   Update On 2020-01-06 08:47 GMT
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது வெங்காயம் விலை கிலோ ரூ.50 ஆக குறைந்துள்ளது.
சென்னை:

வெங்காயம் விளைச்சல் குறைந்ததால் கடந்த மாதம் நாடுமுழுவதும் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்தது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் வெங்காயம் வரத்து குறைந்ததால் 1 கிலோ வெங்காயம் சில்லரை விலையில் ரூ.200 வரை விற்கப்பட்டது.

இதையடுத்து எகிப்து மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. அதன்பிறகு விலை ஓரளவு குறையத் தொடங்கியது. பின்னர் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து அதிகரிக்க தொடங்கியதால் விலையிம் குறைந்து வந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.90-க்கு விற்கப்பட்டது.

தற்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. அதன் காரணமாக தற்போது வெங்காயம் விலை கிலோ ரூ.50 ஆக குறைந்துள்ளது. சென்னையில் உள்ள மற்ற இடங்களில் கிலோ ரூ.65 வரை விற்கப்படுகிறது.

இதுதொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 70 லாரிகளில் வெங்காயம் வரும். கடந்த 2 மாதங்களாக 30 லாரிகளாக குறைந்தது. தற்போது 55 லாரிகளுக்கு மேல் வெங்காயம் வருகிறது. இதன் காரணமாக விலை குறைய தொடங்கியுள்ளது. இனி வரும் வாரங்களில் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கோயம்பேடு மார்க்கெட்டில் மற்ற மாய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:-

தக்காளி - 20
பீட்ருட் - 20
புடலங்காய் - 20
சின்ன வெங்காயம் - 120
கத்தரிக்காய் - 25
பாகற்காய் - 25
உருளைக்கிழங்கு - 33
அவரைக்காய் - 30
வெண்டைக்காய் - 30
முள்ளங்கி - 10
முட்டைகோஸ் - 10
பீன்ஸ் - 35
கேரட் - 60
முருங்கைக்காய் - 160
பச்சைமிளகாய் - 15
Tags:    

Similar News