செய்திகள்
மதுரை ஐகோர்ட்

வாக்கு பதிவு வீடியோ- தேர்தல் ஆணையம் கோரிக்கை நிராகரிப்பு

Published On 2020-01-06 07:04 GMT   |   Update On 2020-01-06 07:04 GMT
வாக்கு பதிவு வீடியோ விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் வைத்த கோரிக்கையை ஐகோர்ட்டு நிராகரித்துள்ளது.

மதுரை:

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போதும் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.

எனவே வாக்கு எண்ணிக்கையையும், வாக்கு எண்ணும் மையங்களின் உள்ளேயும், வெளிப் பகுதியையும் முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கடந்த 31-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் 10-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் முறையிட்டனர்.

இந்த முறையீட்டை வழக்காக எடுத்து நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அப்போது மதுரை ஐகோர்ட்டு எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களின் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ நகலை மறுநாளே (3-ந்தேதி) மாலை 5 மணிக்குள் ஐகோர்ட்டு பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தர விட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை இன்று மதியம் 12.30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் மதியம் 1 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் கூறினர்.

Tags:    

Similar News