செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2020-01-06 03:25 GMT   |   Update On 2020-01-06 03:25 GMT
தனித்து போட்டியிட்டு இருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருப்போம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை:

மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் அனைவரும் பதற்றம் இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறோம். ஆனால் மு.க.ஸ்டாலினிடம் அது இல்லை. அரசாங்கம் மக்களுக்காக செயல்படுகிறது. எங்கள் கடன் மக்களுக்கு பணி செய்வதே, என்று நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம்.

என்னை முந்திரிக்கொட்டை அமைச்சர் என்று ஸ்டாலின் சொல்கிறார். உடல் ஆரோக்கியம் தரக்கூடியது முந்திரிக்கொட்டை. பலா பழத்தில் தோலை எடுக்காமல் உள்ளே இருக்கும் சுளையை எடுப்பதில் கெட்டிக்கார குடும்பம், கெட்டிக்கார கட்சி தி.மு.க. தான். அப்படி இல்லாமல் முந்திரிக்கொட்டையாக நான் இருப்பது மேல்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் தேர்தல் எப்படி நடந்தது?. அராஜகம், அட்டூழியம், அநியாயம் செய்தார்கள். சென்னையில் அப்போது நாங்கள் போராட்டம் நடத்தினோம். அப்போது இருந்த தேர்தல் ஆணையம் தபால் ஊழியர் வேலை பார்த்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை.

எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக தேர்தலை, தேர்தல் ஆணையம் நடத்தி முடித்து இருக்கிறது. ஊரே அதனை பாராட்டுகிறது. ஆனால் நாங்கள் பெற்ற மகத்தான வெற்றியை மூடி மறைப்பதற்காக தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுப்பது, ஆணையரை வம்புக்கு இழுப்பது என மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார்.



சட்டத்தின்படி, விதிகளின்படி தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி முடித்துள்ளது. நாங்கள் குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக தோற்றத்தை உருவாக்க மு.க.ஸ்டாலின் பார்த்தார். இப்போது கோர்ட்டுக்கு சென்று இருக்கிறார்.

ஜனநாயகத்தில் தேர்தலில் வெற்றி பெற்று கடமையை ஆற்ற இருக்கும் நிலையில், அதைக்கூட செய்யக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். இதுபோன்ற ஜனநாயக விரோத கட்சி தி.மு.க.வாக மட்டும்தான் இருக்கமுடியும்.

2021-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று எங்களால் நம்பிக்கையோடு சொல்ல முடியும். ஆனால் மு.க.ஸ்டாலினால் அது கூட சொல்ல முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம், ‘பா.ஜ.க. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு இருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கிறது என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருக்கிறாரே?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், ‘அது அவருடைய கருத்தா? கட்சியின் கருத்தா? என்று தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் கூட்டணியில் இருந்து கொண்டு இதுபோல் பேசுவது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல’ என்றார்.

Tags:    

Similar News