செய்திகள்
மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி- மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2020-01-05 08:58 GMT   |   Update On 2020-01-05 08:58 GMT
தமிழக உள்ளாட்சி தேர்தலில் சரிசமமாக வெற்றி பெற்றுள்ளோம் என்று அதிமுக பொய் பிரசாரம் செய்வதாக மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை:

தென்சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டையில் தனது தொகுதி பெண்களுக்கு இலவசமாக கணினி தொழில் பயிற்சிகள் அளிக்கும் மையத்தை மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த பயிற்சி வகுப்பில் சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் சேரலாம் அவர்களுக்கு டேலி உள்ளிட்ட 4 விதமான பயிற்சிகள் அளிக்கப்படும். 4 மாதங்கள் பயிற்சிகள் நடைபெறும். பயிற்சி முடித்ததும் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படு வதோடு வேலை நியமன ஆணைகளும் வழங்கப்படும்.

குறைந்தபட்சம் ஆண்டுக்கு 200 பெண்களுக்கு இந்த மாதிரி வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்த பயிற்சி மையத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ள பெண்கள் ‘தனியார் நிறுவனங்களில் ஆயிரக் கணக்கில் பணம் செலுத்தித்தான் பயிற்சி பெற முடியும். ஆனால் இங்கு இலவசமாக பயிற்சியும் தந்து வேலைவாய்ப்புக்கான உத்தரவாதமும் வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்து முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை தி.மு.க. அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலையையும் அவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சைதாப்பேட்டையில் இந்த சிலை அமைவதற்கு முக்கிய காரணம் உண்டு. 1957-ல் குளித்தலையில் முதல் முதலாக கலைஞர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றிருந்தாலும் 67 தேர்தலில் அவரிடம் தேர்தல் நிதியாக ரூ.10 லட்சம் திரட்டி தரும்படி அண்ணா உத்தரவிட்டார். அதை ஏற்று ஊர் ஊராக சென்று நிதி திரட்டி கலைஞர் 11 லட்சம் வழங்கினார்.

அதை மனதில் கொண்டு வேட்பாளர் பட்டியலை அறிவித்த அண்ணா சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளராக ரூ.11 லட் சத்தை அறிவிக்கிறேன் என்று சொன்னார். அந்த அளவுக்கு பெருமை பெற்ற தொகுதி சைதாப்பேட்டை. இந்த தொகுதியில் கலைஞர் வெற்றி பெற்று தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகுதான் கலைஞரும் முதல்-அமைச்சரானார்.

சைதாப்பேட்டை கலைஞர் பேட்டை, கழகத்தின் கோட்டை. இந்த மாவட்டத்தின் செயலாளராக இருக்கும் மா.சுப்ரமணியனிடம் ஒரு பணியை ஒப்படைத்தால் நான் எதிர்பார்ப்பதை விட பத்து மடங்கு அதிகமாகவே செய்து முடிப்பார்.

அதே போலத்தான் இந்த நிகழ்ச்சியையும் செய்திருக்கிறார்.எனது தொகுதியான கொளத்தூரில் நீட் தேர்வால் தனது மருத்துவ கனவை தொலைத்து உயிர் மாய்த்த அனிதாவின் பெயரால் கல்வி மையம்ஒன்றை தொடங்கி மாணவிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக 67 பேர் பயிற்சி பெற்று வேலைக்கு சென்றுள்ளார்கள். இப்போது 61 பேர் பயிற்சி பெற்று வரு கிறார்கள். இதேபோல் தமிழகம் முழுவதும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கல்வி மையங்களை தொடங்கி வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.

கடந்த இரண்டு நாட்களாக நல்ல தகவல் வந்து கொண்டிருக்கிறது. உள்ளாட்சியில் நல்லாட்சி கொடுத்ததால் நாம் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் ஊடகங்களில் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் சரிசம அளவில் வென்றதாக சொல்கிறார்கள்.

அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் தி.மு.க. தேய்பிறை என்றும் அ.தி.மு.கவை வளர்பிறை என்றும் சொல்கிறார். ஒன்றிய கவுன்சிலர்கள் 2100 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் 1781 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இது சரிசமமா?

மாவட்ட பஞ்சாயத்தில் தி.மு.க. 243 இடங்களில் வென்றுள்ளது. அ.தி.மு.க. 214 இடங்களில் வென்றுள்ளது இது சரிசமமா?

முந்திரிக்கொட்டை அமைச்சர் அரசியலுக்காக வேண்டுமானால் அப்படி பேசலாம். ஊடகங்கள் தவறாக எழுதலாமா? 2020 வரும் காலத்தில் தி.மு.க. இதைவிட மகத்தான வெற்றி பெறும். தொடர்ந்து கலைஞர் வழியில் அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வோம்.

நிகழ்ச்சியில் பொன்முடி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சேகர்பாபு, தாயகம் கவி, வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ், கட்சி நிர்வாகிகள் எம். கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், மகேஷ்குமார், தனசேகரன், அன்பரசன், குணசேகரன், பிரபாகர், ராஜா, கோல்ட் பிரகாஷ், அடையாறு பால சுந்தரம், கோட்டூர் சண்முகம், வக்கீல் ஸ்ரீதர், டி.என்.சிவமணி ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News