செய்திகள்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றவர் பி.எச்.பாண்டியன்: இபிஎஸ்-ஓபிஎஸ் புகழாரம்

Published On 2020-01-04 07:53 GMT   |   Update On 2020-01-04 07:53 GMT
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அன்பையும் நன்மதிப்பையும் பி.எச்.பாண்டியன் பெற்றிருந்ததாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.
சென்னை:

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

அதிமுக சட்ட ஆலோசகரும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் சபாநாயகருமான டாக்டர் பி.எச்.பாண்டியன், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

கட்சியின் அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி மறைந்த டாக்டர் பி.எச்.பாண்டியன், அதிமுகவின் தொடக்க காலத்தில் இருந்து கொள்கை உறுதிமிக்கத் தொண்டராகப் பணியாற்றியவர். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று, அவர் ஆற்றிய பணிகள் அதிமுகவுக்கு பேருதவி புரிந்தன.



தமிழ்நாட்டின் மிகச்சிறந்த வழக்கறிஞராகவும், பேச்சாளராகவும், அரசியல் வல்லுநராகவும், சட்டமன்றப் பேரவை தலைவராகவும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும், கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராகவும் பணியாற்றிய டாக்டர் பி.எச்.பாண்டியன், வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறுவார். அவரது மறைவு அதிமுகவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றால் அது மிகையல்ல.

அன்பு அண்ணன் டாக்டர் பி.எச்.பாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக கழக அமைப்புச் செயலாளர் பி.எச்.மனோஜ் பாண்டியனுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். பி.எச்.பாண்டியனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அவர்கள்  கூறி உள்ளனர். 
Tags:    

Similar News