செய்திகள்
திருமாவளவன்

திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Published On 2020-01-03 19:15 GMT   |   Update On 2020-01-03 19:15 GMT
காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வெற்றியை எதிர்த்து திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், தபால் ஓட்டுகளுடன் தேர்தல் அதிகாரி ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
சென்னை:

தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் 84 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றார்.

இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தொல்.திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில், “காட்டுமன்னார் கோவில் தொகுதியில் நடந்த தேர்தலில் பல முறைகேடுகள் நடந்தன. தபால் ஓட்டுகள் முறையாக எண்ணப்படவில்லை. 102 தபால் ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டன. அதில், ஒரு ஓட்டு ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற காரணத்தை கூறவில்லை. 101 ஓட்டுகள் எந்த வாக்காளர்கள் போட்டார்கள் என்பது அடையாளம் காண முடியவில்லை என்பதால், அவற்றை நிராகரித்துள்ளனர். எனவே, இந்த தபால் ஓட்டுகளை எண்ண வேண்டும். என்னை வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கு நேற்று அவர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 102 தபால் ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டது தவறு என்று தொல்.திருமாவளவன் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியின் தேர்தல் அதிகாரி முத்துக்குமாரசாமி, 102 தபால் ஓட்டுகளுடன் வருகிற 20-ந்தேதி பிற்பகல் 2.15 மணிக்கு இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

அத்துடன் விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
Tags:    

Similar News