செய்திகள்
டி.ஆர்.பாலு

தேர்தல் ஆணையம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை- டி.ஆர்.பாலு பேட்டி

Published On 2020-01-03 07:56 GMT   |   Update On 2020-01-03 07:56 GMT
நடைபெறும் சம்பவங்களால் பொதுமக்களும் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாமல் உள்ளனர் என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

சென்னை:

தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து, தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்காமல் உடனே அறிவிக்க கோரி வலியுறுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் டி.ஆர்.பாலு கூறியதாவது:-

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகும் பல இடங்களில் முடிவுகளை அறிவிக்காமல் உள்ளனர். இதை தேர்தல் ஆணையரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.

ராமநாதபுரத்தில் மாவட்ட கவுன்சில் வார்டு 7, 14 ஆகியவற்றில் ஓட்டு எண்ணிக்கை முடிந்து விட்டது. அங்கு தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதால் வெற்றி சான்றிதழ் கொடுக்காமல் உள்ளனர்.

மதுகுளத்தூர் யூனியனில் வார்டு எண்.10-ல் 3420 ஓட்டு பதிவானது. ஆனால் 3020 ஓட்டுகள்தான் எண்ணப்பட்டுள்ளது. 400 ஓட்டுகள் உள்ள பெட்டி கொண்டு வரப்படவில்லை. ஆனால் அதை அப்படியே எண்ணி அறிவித்து விட்டனர்.

கரூரில், பரமத்தி ஒன்றியம் வார்டு 1, 12, 15, 16 ஆகிய வார்டுகளில் ஓட்டு எண்ணிக்கை முடிந்து விட்டது. ஆனால் முடிவுகளை அறிவிக்காமல் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஒன்றியம் வார்டு 16-ல் ஓட்டு எண்ணி முடித்தும் சான்றிதழ் கொடுக்காமல் உள்ளனர்.

தேர்தல் ஆணையம் பாராமுகமாக உள்ளது. நடைபெறும் சம்பவங்களால் பொதுமக்களும் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாமல் உள்ளனர்.

கேள்வி:- வாக்கு எண்ணிக்கையை முழுவதுமாக நடக்க விடாமல் தடுப்பதற்காக தி.மு.க. முயல்கிறது. தி.மு.க. தான் வன்முறையை தூண்டுவதாக பொன்னையன் கூறி இருக்கிறாரே?

பதில்:- பொன்னையன் பேசுவதெல்லாம் ஒரு பேச்சா? அவரை பற்றி என்னிடம் கேட்கிறீர்களே. ரொம்ப வருத்தமாக உள்ளது.

கேள்வி:- தேர்தல் ஆணையம் உங்கள் புகார்களுக்கு பதில் தருகிறதா?

பதில் :- தேர்தல் ஆணையம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று தெரியவில்லை. 2 முதல்-அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் இருக்கலாம். அல்லது ஏதாவது உயர் அதிகாரி கட்டுப்பாட்டில் இருக்கலாம் என நினைக்கிறேன்.

இந்த முறை எந்த தில்லுமுல்லு நடைபெறவும் நாங்கள் விடமாட்டோம். ஒவ்வொரு விஷயத்திலும் தலைவர் மு.க.ஸ்டாலின் மிக நுணுக்கமாக அணுகுகிறார்.

இப்போது தவறு செய்கிற ஒவ்வொரு அதிகாரி மீதும் நாங்கள் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

ஓட்டு எண்ணிக்கை விஷயத்தில் சரியாக நடந்து கொண்டால் மறப்போம் மன்னிப்போம் என்று விட்டு விடுவோம். இல்லையென்றால் நீதிமன்றத்தில் சந்திப்போம்.

கேள்வி:- அடுத்து நடக்க இருக்கும் தலைவருக்கான மறைமுக தேர்தல் தி.மு.க. வுக்கு சாதகமாக இருக்குமா?

பதில்:- நிச்சயமாக நாங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவோம்.

தி.மு.க.வின் புதிய தலைமை ஸ்டாலினின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். இந்தியாவில் உள்ள அத்தனை தலைவர்களும் இவரது வளர்ச்சியை, நடவடிக்கையை பார்க்கிறார்கள். இந்திய அளவில் உரிய மரியாதை கொடுக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் முன்பு போல் கட்சி நடத்தவில்லை. தலைவர் கலைஞர் காலத்தில் நடந்ததைவிட இன்னும் 10 மடங்கு அதிகம் நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News