செய்திகள்
சிபிஐ அலுவலகம்

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை- சிபிஐ விசாரணை தொடங்கியது

Published On 2019-12-30 07:06 GMT   |   Update On 2019-12-30 07:06 GMT
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்ற சிபிஐ, இன்று முதல்கட்ட விசாரணையை தொடங்கியது.
சென்னை:

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், கடந்த மாதம் 9-ம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, மாணவியின் தந்தை தொடர்ந்து கூறி வந்தார். 

இது சந்தேக மரணம் என்று கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. பின்னர் மத்தியக் குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தி தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

தற்கொலைக்கு காரணம் பேராசிரியர்கள்தான் என பாத்திமா தனது செல்போனில் பதிவு செய்திருந்தார். அது தடயவியல் ஆய்வுக்கு உப்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.



பின்னர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மாணவி பாத்திமாவின் தந்தை, மத்திய அரசிடம் முறையிட்டிருந்தார். ஐஐடி மாணவர்கள் தற்கொலை விவகாரம் அனைத்தையுமே சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். அதன்பின்னர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதையடுத்து வழக்கை விசாரணைக்கு ஏற்ற சிபிஐ, இன்று முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. 

மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் நாளை சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகளை சந்தித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News