செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் ஆபாச படம் பார்த்த 30 பேரை கைது செய்ய வேட்டை

Published On 2019-12-25 07:41 GMT   |   Update On 2019-12-25 07:41 GMT
சென்னையில் சிறுமிகளின் ஆபாச படங்களை பார்த்த 30 பேரை கைது செய்ய போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
சென்னை:

இணைய தளங்களில் சிறுவர்-சிறுமிகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம். அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் சமீபத்தில் தெரிவித்து இருந்தனர்.

இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.ரவி எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘மத்திய அரசு அளித்துள்ள தகவலின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கி இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து திருச்சியில் கடந்த வாரம் சிறுவர்- சிறுமிகளின் ஆபாச படங்களை பரப்பிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச படங்களை பலருக்கும் அனுப்பி இருப்பது தெரிய வந்தது.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை போலீசார் தடயவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

சென்னையிலும் சிறுமிகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் பட்டியல் தயாரானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய கூடுதல் டி.ஜி.பி. ரவி சென்னை போலீசிடம் ஆபாச படங்களை பார்த்தவர்களின் 30 பேர் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

சென்னை போலீசில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவில் துணை கமி‌ஷனராக இருக்கும் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் 30 பேரையும் பிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர்.

ஐ.பி. முகவரியை வைத்து அவர்கள் யார்? யார் என்று விசாரணை நடத்தப்பட்டது.

30 பேரில் 24 பேரின் செல்போன் நம்பரை வைத்து போலீசார் துப்பு துலக்கினார்கள். அப்போது அவர்களின் பெரும்பாலானோர் சென்னைக்கு வெளியே இருப்பது தெரிய வந்தது.

24 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருசிலர் மேற்கு வங்காளத்தில் இருப்பது போன்றும் செல்போன் சிக்னல் காட்டியுள்ளது.

இதுபற்றி துணை கமி‌ஷனர் ஜெயலட்சுமி கூறும்போது, ‘30 பேரின் ஐ.பி. முகவரியை வைத்து விசாரணை நடத்தியதில் 24 பேர் பற்றி உரிய தகவல்கள் கிடைத்துள்ளன.

அவர்களை கைது செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது’ என்று தெரிவித்தார்.

ஆபாச வீடியோ விவகாரத்தில் சென்னை போலீசாரும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பது இளைஞர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தங்களது செல்போன்களில் உள்ள ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை பலர் அழித்து வருகிறார்கள்.

இருப்பினும் இணைய தளத்தில் புகுந்து சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை தேடியவர்கள் தப்ப முடியாது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News