செய்திகள்
கோவில் வாசலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை, கிரண்பெடி, நாராயணசாமி, ஆகியோர் வரவேற்ற போது எடுத்த படம்.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஜனாதிபதி தரிசனம்

Published On 2019-12-24 20:35 GMT   |   Update On 2019-12-24 20:35 GMT
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று காலை குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் சனி பகவானுக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டார்.
காரைக்கால்:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு வந்தார். புதுச்சேரி பல்கலைக்கழக மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அரவிந்தர் ஆசிரமம், புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் மாத்ரி மந்திர் ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.

பின்னர் கவர்னர் மாளிகைக்கு திரும்பிய ஜனாதிபதி இரவில் அங்கு தங்கினார். நேற்று காலை 9.30 மணி அளவில் கவர்னர் மாளிகையில் இருந்து லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையத்துக்கு சென்றார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். ஜனாதிபதியுடன் அவருடைய மனைவி சபிதாவும் வந்திருந்தார்.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் புதிதாக அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளத்தில் காலை 10.40 மணிக்கு அவருடைய ஹெலிகாப்டர் வந்து இறங்கியது. பின்னர் அங்கிருந்து, கார் மூலம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்றார். அங்கு ஜனாதிபதியை, கவர்னர் கிரண்பெடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

கோவிலில் உள்ள 4 பிரதான சன்னதிகளான சண்டிகேஸ்வரர், அம்பாள், தர்பாரண்யேஸ்வரர் சன்னதிகளில் ஜனாதிபதியும், அவருடைய மனைவியும் சாமி தரிசனம் செய்தனர்.

இறுதியாக, சனி பகவான் சன்னதியில் ஜனாதிபதியும், அவருடைய மனைவியும் 9 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.

சாமி தரிசனத்திற்கு பிறகு கோவிலுக்குள் நடந்த நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட நம் நீர் திட்டத்தின் செயல்விளக்க கையேட்டை முதல் அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார். அதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெற்றுகொண்டார்.

முன்னதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சார்பில், அவரது பிரதிநிதிகள் ஜனாதிபதியின் நலன், உலக நன்மை வேண்டி நவக்கிரக சாந்தி ஹோமம் நடத்தினர். கோவில் சார்பில், கலெக்டர் விக்ராந்த்ராஜா, நிர்வாக அதிகாரி சுபாஷ் மற்றும் சிவாச்சாரியார்கள் ஜனாதிபதிக்கு வெள் ளிக் கலசம் வழங்கினர்.

சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். 
Tags:    

Similar News