செய்திகள்
மு.க.ஸ்டாலின்

பொதுமக்களுக்கு இடையூறான போராட்டம்- மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக சம்மன்

Published On 2019-12-24 04:58 GMT   |   Update On 2019-12-24 06:28 GMT
பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நாளை மறுநாள் ஆஜராகும்படி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டத்துக்கும், ஆர்ப்பாட்டத்துக்கும் தி.மு.க.வும் அதன் தோழமை கட்சிகளும் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந்தேதி அழைப்பு விடுத்து இருந்தன.

சென்னையில் இந்த போராட்டம் அண்ணாசாலையில் நடைபெற்றது. போராட்டத்தின் போது அண்ணாசாலையின் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். சிம்சன் பகுதியிலும் குவிந்தனர்.

அண்ணாசாலையில் இருந்து மெரினா கடற்கரை காமராஜர் சாலையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். போராட்டக்காரர்கள், போலீசார் அமைத்து இருந்த தடுப்புகளையும் மீறி சென்றனர்.

போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றதால் அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அப்போதைய காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 7 முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரமேஷ் இதனை விசாரித்தார். இதில் நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஆஜராகாத மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா, கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 7 பேரும் நாளை மறுநாள் (26-ந்தேதி) நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் வழங்க நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி 26-ந்தேதி நடைபெறும் விசாரணையில் மு.க.ஸ்டாலின் உள்பட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News