செய்திகள்
கத்திக்குத்து

வீராம்பட்டினத்தில் கால்பந்தாட்ட தகராறில் மீனவருக்கு கத்திக்குத்து

Published On 2019-12-23 10:37 GMT   |   Update On 2019-12-23 10:37 GMT
வீராம்பட்டினத்தில் கால்பந்தாட்ட தகராறில் மீனவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுச்சேரி:

வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது22), மீனவர். இவருடைய தம்பி வாசு(17). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று இவரும் அதே பகுதியை சேர்ந்த விஸ்வா (20) என்பவரும் அப்பகுதியில் கால்பந்து விளையாடினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

அந்த மோதலை தொடர்ந்து விஸ்வா மற்றும் அவரது தரப்பை சேர்ந்த கோகுல் ஆகிய இருவரும் செல்போனில் பேசி வாசுவுக்கு மிரட்டல் விடுத்தனர். ஆனால் இதுபற்றி வாசு தனது அண்ணன் கோகுல்ராஜியிடம் கூறவில்லை.

இந்த நிலையில் நேற்று கோகுல்ராஜ் அப்பகுதியை கடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த விஸ்வா திடீரென கோகுல்ராஜை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோகுல்ராஜின் வயிற்றில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் காயம் அடைந்த கோகுல்ராஜ் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து அரயாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி விஸ்வாவை தேடிவருகிறார்.

Tags:    

Similar News