செய்திகள்
பியூஸ்கோயல்

3000 ரெயில் பெட்டிகளை தயாரித்து சென்னை ஐ.சி.எப். சாதனை: ரெயில்வே மந்திரி பெருமிதம்

Published On 2019-12-23 01:51 GMT   |   Update On 2019-12-23 01:51 GMT
215 நாட்களில் 3,000 ரெயில் பெட்டிகளை தயாரித்து சென்னை ஐ.சி.எப். சாதனை படைத்துள்ளது என்று ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.
சென்னை :

சென்னை பெரம்பூரில் ரெயில்வே துறையின் கட்டுப்பாட்டின்கீழ் ரெயில் பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இது நாட்டிலுள்ள மிக முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாகும்.

இந்தியா மட்டுமின்றி இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இந்த தொழிற்சாலையில் இருந்து ரெயில் பெட்டிகள் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு வசதிகளுடன் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

இங்கு ‘வந்தேபாரத்’ எனப்படும் அதிநவீன வசதி கொண்ட ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன. 64 ஆண்டுகள் பழமையான இந்த தொழிற்சாலையில் கடந்த நிதி ஆண்டில் (2018-19) 3,000 ரெயில் பெட்டிகளை 289 நாட்களில் தயாரித்து சாதனை படைத்தனர்.

ஆனால் நடப்பு நிதி ஆண்டில் (2019-2020) 3,000 ரெயில் பெட்டிகளை 215 நாட்களில் தயாரித்து முந்தைய சாதனையை ஐ.சி.எப். முறியடித்துள்ளது.

இதுகுறித்து ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-



ஐ.சி.எப். 9 மாதத்துக்கு குறைவான காலத்தில் 3,000 ரெயில் பெட்டிகளை தயாரித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. ரெயில் பெட்டிகள் தேவை, இதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 289 நாட்கள் காலஅவகாசம் எடுத்துக்கொண்ட நிலையில், இந்த ஆண்டில் 215 நாட்களில் 3,000 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் கடந்த ஆண்டை காட்டிலும், 3,000 ரெயில் பெட்டிகள் தயாரிக்க எடுத்துக்கொண்ட காலஅவகாசம் 25.6 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து ஐ.சி.எப். இதுபோன்ற சாதனையை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்னர், ஒரு ஆண்டுக்கு தலா 1,000 ரெயில் பெட்டிகள் தயாரிப்பதே சாதனையாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஐ.சி.எப். மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டில் 3,250 ரெயில் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்பட்டன. நடப்பு நிதி ஆண்டில் 215 நாட்களில் 3,000 பெட்டிகள் தயாரித்துள்ளோம். நடப்பு நிதி ஆண்டு முடிவதற்குள் இந்த எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளது.

‘அதிநவீன வசதி கொண்ட 2 ‘வந்தே பாரத்’ ரெயில்கள் ஐ.சி.எப்.பில் தயாரிக்கப்பட்டு டெல்லி-லக்னோ மற்றும் டெல்லி-வை‌‌ஷ்ணவிதேவி கோவிலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரக பெட்டிகளை கூடுதலாக தயாரிக்க வேண்டும் என பியூஸ் கோயல் ஆணை பிறப்பித்ததால், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 750 ‘வந்தே பாரத்’ ரெயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது’ என்று கூறினர்.
Tags:    

Similar News