செய்திகள்
நளினி

சிறையில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும்- ஐகோர்ட்டில் நளினி மனு

Published On 2019-12-21 03:08 GMT   |   Update On 2019-12-21 03:08 GMT
சிறையில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஐகோர்ட்டில் நளினி தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட ஐகோர்ட்டு நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.
சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினி, சென்னை ஐகோர்ட்டில் புதிதாக ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருந்ததாவது:- கடந்த 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறேன். இந்த நிலையில், 10 ஆண்டுகள் சிறை வாசம் முடித்த 3,000-க்கும் மேற்பட்ட கைதிகள் நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 பேரை மட்டும் தமிழக அரசு இதுவரை விடுவிக்கவில்லை.

எங்கள் 7 பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை கடந்த 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரை மீது கவர்னர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியலமைப்பு சட்டப்படி, அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று மறுநாளே எங்களை விடுதலை செய்து கவர்னர் உத்தரவிட்டு இருக்க வேண்டும்.

கவர்னர், அதுபோன்று எந்த உத்தரவையும் பிறப்பிக்காததன் மூலம் நாங்கள் சட்டவிரோத காவலில் உள்ளதாகவே கருத வேண்டும். அந்த அடிப்படையில் சிறையில் இருந்து என்னை விடுவிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 7-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Tags:    

Similar News