செய்திகள்
வெங்காயம்

வெங்காயம் விலை ரூ.100 ஆக குறைந்தது

Published On 2019-12-20 05:58 GMT   |   Update On 2019-12-20 05:58 GMT
வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் மொத்த விலையில் ரூ.100 ஆக குறைந்துள்ளது.
சென்னை:

தட்டுப்பாடு காரணமாக இந்தியா முழுவதும் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்தது. உச்சபட்சமாக வெங்காயம் விலை கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது.

வெங்காய தட்டுப்பாட்டை போக்க எகிப்தில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டது. அதன்பிறகு வெங்காயம் விலை ஓரளவு குறையத்தொடங்கியது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வருகிறது.

ஏற்கனவே ஒவ்வொரு லாரியிலும் 20 டன் வெங்காயம் என மொத்தம் 30 லாரிகளில் வெங்காயம் வந்தது. தற்போது 50 லாரிகளில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெங்காயம் வருகிறது. இதில் 3 லாரிகளில் எகிப்து வெங்காயம் வருகிறது.

இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் மொத்த விலையில் ரூ.100 ஆக குறைந்துள்ளது. மகாராஷ்டிரா வெங்காயம் கிலோ ரூ.100-க்கும், ஆந்திரா வெங்காயம் கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெரிய வெங்காயம் விலை இனி படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சாம்பார் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. சில்லரை விலையில் ரூ.200 வரை விற்கப்படுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. 1 கிலோ உருளைக்கிழங்கு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. மேலும் கேரட் ரூ.50-க்கும், பீட்ருட் ரூ.45-க்கும், சவ்சவ் கிலோ ரூ.25-க்கும், தக்காளி ரூ.20-க்கும், கத்தரிக்காய் ரூ.30-க்கும், பீன்ஸ் ரூ.40-க்கும், முருங்கைக்காய் ரூ.350-க்கும் விற்கப்படுகிறது.
Tags:    

Similar News